| ADDED : ஜூலை 18, 2024 03:03 PM
பந்தலுார், ஜூலை 19-பந்தலுார் அருகே பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட துவக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி தலைமை வகித்து பேசுகையில், ''அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பதுடன், அதனை ஒட்டி உள்ள கிராம பகுதிகளில் எழுத்தறிவு இல்லாத மக்களுக்கு எழுத்தறிவிக்கும் வகையில் அரசு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் இந்த பள்ளியில், 61 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். தொடர்ந்து, மாணவர் சேர்க்கை அதிகரிப்பதுடன், தரமான கல்வி போதித்து சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்குவதில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகிறோம்,'' என்றார். சீனிவாசா அறக்கட்டளை கள இயக்குனர் சுந்தர்ராஜ் பேசுகையில், ''அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள், அறக்கட்டளை மூலம் செய்து தரப்பட்டு வருகிறது. எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க முன் வர வேண்டும்,'' என்றார். தொடர்ந்து வார்டு உறுப்பினர் அஷ்ரப், பி.டி.ஏ., தலைவர் ஸ்ரீஜேஸ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்திராகாந்தி உள்ளிட்டோர் பேசினர்.தொடர்ந்து, பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு கிரீடம் வைத்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, தன்னார்வலர்களிடம் புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.