உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பசுமை இல்ல வாயு; காலநிலை மாற்றத்திற்கு காரணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கில் தகவல்

பசுமை இல்ல வாயு; காலநிலை மாற்றத்திற்கு காரணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கில் தகவல்

ஊட்டி;பசுமை இல்ல வாயு காலநிலை மாற்றத்திற்கான காரணமாக உள்ளதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.ஊட்டி மேலுார் ஓசஹட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கு நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: காலநிலை மாற்றத்திற்கான காரணமாக இருக்கும் பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதற்கான முயற்சியில், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களை குறைத்து, பூஜ்ஜியம் உணர்வு நிலைக்கு கொண்டு வருவதற்கான செயல் திட்டத்தை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தற்போது, நம் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களில் பெரும்பான்மை ஆற்றல் துறையை சார்ந்துள்ளது. ஆற்றல் துறையில் மட்டும், 80 சதவீதம் வெளியிடப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து, ஆறு சதவீதமும், கழிவுகளில் இருந்து, ஐந்து சதவீதமும், விவசாய காடு நில பயன்பாடு காரணமாக, ஒன்பது சதவீதமும் கார்பன் வெளியிடப்படுகிறது.ஆற்றல் துறையை பொறுத்தமட்டில், 61 சதவீதம் மின்சாரம் தயாரிப்பதற்காகவே நடக்கிறது. போக்குவரத்து துறையில், 19 சதவீதம் கார்பன் வெளிப்படுகிறது. தொழிற்சாலை உற்பத்தியை பொறுத்தமட்டில், 98 சதவீதம் சிமென்ட் உற்பத்திக்காக மட்டும் நடக்கிறது.காகித தொழிற்சாலைகளில் இருந்து, 82 சதவீதம் பசுமை இல்ல வாயுக்கள் வெளிப்படுகின்றன. இயற்கையாக இருக்கக்கூடிய காடுகளும், பசுமை பரப்புகளும் அழிந்து வருவதன் காரணமாக, பசுமை இல்ல வாயுக்களை அகற்றும் தன்மை தமிழ்நாட்டில் உள்ள நிலங்களுக்கு குறைந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. அதே நேரத்தில், தமிழக அரசு, 2030ல் ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கோடு, தொழில் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. தற்போது, இருசக்கர வாகனங்களில் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர், நான்கு சக்கர வாகனங்களுக்கு மாறும் நிலை உருவாகி வருகிறது. இச்சூழலில், கார்பன் உமிழ்வை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். பொதுமக்களிடையே விழிப்புணர்வும், அவர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்பது சாத்தியமில்லை. இவ்வாறு, அவர் பேசினார். குன்னுார் லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன், ஆசிரியர்கள் சத்தியசீலன், மணிகண்ட ராஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை