| ADDED : ஜூலை 11, 2024 10:34 PM
குன்னுார் : 'குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் விரிவாக்கம் செய்யும் நிலையில், சாலையில் மண்ணை முழுமையாக அகற்ற வேண்டும்,' என, டிரைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது, குரும்பாடி உட்பட சில இடங்களில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. 'இங்கு பொக்லின் பயன்படுத்தி மண் அகற்றப்பட்டு வரும் பகுதிகளில் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து டிரைவர்கள் கூறுகையில், 'குரும்பாடி உட்பட சில இடங்களில் சாலை நடுவே தோண்டப்பட்டு கால்வாய் அமைக்கப்பட்டு மூடப்படுகிறது. இவை சமமாக இல்லாமல் மேடு தாழ்வாக மூடப்பட்டு இருப்பதால் வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்படுகிறது.இந்நிலையில், சாலையின் பல இடங்களில் மண் இருப்பதால் மழைகாலங்களில் சேறு நிறைந்து வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்வதும் அடிக்கடி நடக்கிறது. பொதுவாக நெடுஞ்சாலை துறை பணிகள் நடக்கும் போது வாகனங்கள் பாதிப்பில்லாத வகையில் செல்வதற்கு, பல இடங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மலைப்பாதையில் மட்டும் இதற்கான விதிமுறைகளை சரிவர பின்பற்றுவதில்லை. இதே போல சாலையோரத்தில் உள்ள முட்புதர்களும் முறையாக அகற்றப்படவில்லை,'என்றனர்.