பெ.நா.பாளையம்: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய தாக போடப்பட்ட தார் ரோடு ஒரே மாதத்தில் பழுதானது.பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்த போது, கோவையிலிருந்து வீரபாண்டி, பிரஸ்காலனி, ஜோதிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நகர பஸ்களும், மேட்டுப்பாளையம், காரமடை செல்லும் புறநகர் பஸ்களும், சாரங்கா நகர் ரோட்டை பயன்படுத்தின. இதனால் ஏற்கனவே பழுதடைந்த ரோடு, மேலும் பழுதாகி, வாகனங்களே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, கூடலூர் நகராட்சி நிர்வாகம் கடந்த மாதம், 90 லட்சம் ரூபாய் செலவில் சாரங்கா நகர் முதல் திருமலைநாயக்கன்பாளையம் வரை புதிய தார் சாலை அமைத்தது. தார் சாலை அமைக்கப்பட்டு, ஒரே மாதத்தில் சாரங்கா நகரில் பல இடங்களில் சாலை பழுதானது. தரமற்ற சாலை அமைக்கப்பட்டதால், பல இடங்களில் வாகனங்களின் எடை தாங்காமல் தார் சாலைகள் பிதுங்கி, வெளியே வந்து விட்டன.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,' அவசர, அவசரமாக போடப்பட்ட தார் சாலை, தற்போது பெய்து வரும் மழைக்கே தாங்கவில்லை. என்றனர். இது குறித்து, கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன போக்குவரத்துக்கு வசதியாக சாரங்கா நகர் ரோடு பயன்படுத்தப்பட்டது. பாலம் கட்டுமான பணி முடிந்தவுடன், புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என, நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்டோம். அவர்கள் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்ததால், கூடலூர் நகராட்சி சார்பில், பொதுமக்களின் நலன் கருதி, சாரங்கா நகரில் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் ரோடு, வண்ணான் கோவில் பிரிவில் வடிகால் கட்டுவதால், மேட்டுப்பாளையம் செல்லும் புறநகர் பஸ்கள் மற்றும் இரும்புக்கம்பி, சிமெண்ட் உள்ளிட்டவைகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சாரங்கா நகர் ரோட்டை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தன. இடைவிடாமல் மழையும் பெய்தது. இதனால் ரோட்டின் சில இடங்களில் பழுது ஏற்பட்டது. அவை உடனடியாக செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.