| ADDED : ஜூலை 03, 2024 02:34 AM
சூலுார்;ஊர் முழுக்க மொய்க்கும் ஈக்களால் மலையப்பாளையம் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது மலையப்பாளையம் ஊராட்சி. இதை அடுத்து கிணத்துக்கடவு ஒன்றியம் நகரகளந்தை ஊராட்சி உள்ளது. நகர களத்தை பகுதியில் இரு தனியார் கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன. இக்கோழிப் பண்ணைகளில் இருந்து வரும் ஈக்களால் ,மலையப்பாளையம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பல முறை மனு அளித்தும் அரசு துறைகள் நடவடிக்கை எடுக்கவில்லை, என்பதால், கோழிப்பண்ணையை மக்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:கோழிப்பண்ணையில் இருந்து வரும் ஈக்களால் ஒவ்வொரு நிமிடமும் அவதிக்குள்ளாகிறோம். வீட்டுக்குள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. உணவு பொருட்கள் மீது ஈக்கள் மொய்க்கின்றன. இதனால், குழந்தைகள், முதியவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்படுகிறது. கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறைக்கு பல முறை புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. அதனால், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.சம்பவ இடத்தில் சூலுார் தாசில்தார் தனசேகர் ஆய்வு செய்தார். கோழிப்பண்ணை பகுதியில் கிணத்துக்கடவு வருவாய்த்துறையினர், போலீசார் ஆய்வு செய்தனர். கோழிப்பண்ணையில் ஆய்வு செய்து, உடனடியாக சுகாதார பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.