ஊட்டி : ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, 32 கிராம மக்கள், கடைகளை அடைத்து கையெழுத்து இயக்கம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊட்டி, 1866ம் ஆண்டு நகராட்சியாக உருவானது. இந்த நகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் அதிக அளவில் அரசு திட்டங்கள்; நிதி செயல்பாட்டுக்கு வரும். தீர்மானம்
இதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் உயரும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப, ஊட்டி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், கடந்த ஜூன், 10ம் தேதி நடந்த நகராட்சி அவசர கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், ஊட்டி நகராட்சியுடன் அருகில் உள்ள, கேத்தி பேரூராட்சி, மற்றும் இத்தலார், உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இத்தலார் உட்பட பல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போராட்டம்
இதை தொடர்ந்து, பல கிராமங்களின் தலைவர்கள் மற்றும் நாக்குபெட்டா படுகர் நல அமைப்பு சார்பில் நடந்த முதல் கட்ட ஆலோசனை கூட்டத்தில், 'ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த கூடாது,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, இத்தலார் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 32 கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊர் தலைவர் ஆலன் கூறுகையில், ''ஊட்டியைமாநகராட்சியாக தரம் உயர்த்தி இத்தலார் ஊராட்சியை அதனுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இந்த கிராமங்களில் பூர்வகுடி, பழங்குடி, தாழ்த்தப்பட்ட மற்றும் விவசாயிகள் உள்ளனர். இத்தலார் ஊராட்சியைமாநகராட்சியுடன் இணைத்தால் பல்வேறு சலுகைகளை இழக்க வேண்டிய நிலை வரும். இதனை தவிர்க்க, பொதுமக்கள் ஒன்றிணைந்து கையெழுத்து இயக்கம் நடத்தி போராட்டம் நடத்தியுள்ளோம். மாநில அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்,'' என்றார்.