| ADDED : ஜூன் 27, 2024 09:29 PM
ஊட்டி: வேகத்தடை வர்ணம் பூசுவது விவகாரத்தில் நகராட்சி கமிஷனர், தலைவர், வார்டு கவுன்சிலர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகே காக்கா தோப்பு பகுதியில் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் உள்ளது. கோர்ட்டுக்கு செல்ல ஹில்பங்க், தமிழகம் மாளிகை சாலைவழியாக தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.தமிழகம் சந்திப்பில் இருந்து வி.சி., காலனி வழியாக கோர்ட் வரை குண்டும், குழியுமாக இருந்த சாலையை நகராட்சி சார்பில் தார் சாலையாக சமீபத்தில் மாற்றப்பட்டது. சாலை அமைக்கும் போது, 10 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது.ஆனால், வேகத்தடைக்கு போக்குவரத்து விதிகளின் படி, வண்ணம் பூசாமல் விட்டுள்ளனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது வேகத்தடை இருப்பது குறித்த அறிவிப்பு பலகையும் இல்லை. 'அறிவிப்பு பலகை வைத்து வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்,' என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். நகராட்சி நிர்வாகம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து, வக்கீல் விஜயன், ஊட்டியில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 'இந்த மனு மீதான விசாரணைக்காக இன்று, (28ம் தேதி) நகராட்சி கமிஷனர், தலைவர் மற்றும் ஏழாவது வார்டு கவுன்சிலர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்,' என, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி லிங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.