உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பில்லாத நிழல் குடைகள் உடைந்து காணப்படும் இருக்கைகள்

பராமரிப்பில்லாத நிழல் குடைகள் உடைந்து காணப்படும் இருக்கைகள்

ஊட்டி : ஊட்டி நகரில் முக்கிய பஸ் ஸ்டாப்களில் நிழல் குடைகளில் உள்ள இருக்கைகள் உடைந்து காணப்படுகின்றன.ஊட்டி நகர் பகுதிகளான மத்திய பஸ் ஸ்டாண்ட், ஏ.டி.சி., சேரிங்கிராஸ் பகுதிகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து வரும் மக்கள் பஸ்சிற்காக காத்திருக்கவும், மழை, வெயில் சமயங்களில் மக்கள் பயன்படுத்த நிழல் குடை அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிழல் குடைகள் அனைத்தும் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.சில இடங்களில் உள்ள நிழல் குடைகளில் சமூக விரோதிகள் மது அருந்தி விட்டு அங்கு உறங்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதும் சமீப காலமாக காண முடிகிறது. இதை தடுக்க வேண்டிய போலீசாரும், நகராட்சியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தரையில் அமரும் அவல நிலை

இந்நிலையில், சில தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் பொது நல அமைப்பினர் நகரில் உள்ள சில நிழல் குடைகளை தங்களது அமைப்பின் சார்பில் நிதி உதவி செய்து, மேற்கூரை, இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். பொதுமக்களுக்கு பயன்பட்டு வந்தது. ஆனால், நகராட்சி நிர்வாகம் கவனிக்காமல் விட்டதால், சேரிங்கிராஸ் உட்பட சில நிழல் குடைகளில் உள்ள இருக்கைகள் உடைக்கப்பட்ட நிலையில் அமர முடியாமலும் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஏ.டி.சி., நிழல் குடையில் இருக்கைகள் களவாடப்பட்டதாலும், பொதுமக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் இல்லாததால் வயதான பெண்கள் தரையில் அமர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.உள்ளூர் மக்கள் கூறுகையில், 'சுற்றுலா நகரில் இது போன்ற அவல நிலை தொடர்வதால் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறோம். சம்பத்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இருக்கைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்