2.5 லட்சம் பேர் குடற்புழு நீக்க மாத்திரையால் பயன்; சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்
ஊட்டி; 'நீலகிரியில், 2.5 லட்சம் பேர் குடற்புழு நீக்க மாத்திரையால் பயனடைவர்,' என, சுகாதார துறை துணை இயக்குனர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நாள், 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, ஊட்டி அரசு கலை கல்லுாரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில், தேசிய குடற்புழு தினத்தை ஒட்டி குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை துவக்கி வைத்து, கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில், ''ஒரு வயது முதல், 19 வயது வரை குழந்தைகளுக்கு, 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகளுக்கு மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு குடற்புழ நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. 2 வயது வரை குழந்தைகளுக்கு அரை மாத்திரை, 19 வயது வரை ஒரு மாத்திரை, 20 வயது முதல் 30 வயது பெண்களுக்கு ஒரு மாத்திரை வழங்க வேண்டும். உணவு உட்கொண்ட பிறகு மாத்திரை வழங்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க கூடாது,'' என்றார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோம சுந்தரம் பேசுகையில், ''மாவட்டத்தில் இம்மாத்திரைகள் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் வழங்கப்படுகிறது. 'குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள்,' என, 2.5 லட்சம் பேர் பயனடைவார்கள்,''என்றார். ஆர்.டி.ஓ., சதீஷ், வட்டார மருத்துவ அலுவலர் முருகேஷன் உட்பட பலர் பங்கேற்றனர்.