நாய் வேட்டையில் சிறுத்தை; சாலையில் காத்திருந்த குட்டி
குன்னுார்; குன்னுார் அருகே, ஜெகதளா ஆரோக்கியபுரம் பகுதியில், நாயை வேட்டையாடி சென்ற சிறுத்தையை பின்தொடர்ந்து, மற்றொரு சிறுத்தை குட்டியும் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்னுார் அருவங்காடு, ஜெகதளா பேரூராட்சி பாலாஜி நகர், பாய்ஸ் கம்பெனி, கார்டைட் தொழிற்சாலை, கேட்டில் பவுண்ட், ஆரோக்கியபுரம் இடையே உள்ள முத்தம்மாசேரி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது இரவில் வரும் சிறுத்தை நாய்களை வேட்டையாடி செல்கிறது. இந்நிலையில், நள்ளிரவு, 1:00 மணியளவில், ஆரோக்கியபுரம் பகுதியில் வந்த சிறுத்தை, ஆனந்த் லீலா என்பவரின் குடியிருப்புக்குள் புகுந்து, வளர்ப்பு நாயை விரட்டி, கவ்வி சென்றது. அதேசமயம் சிறுத்தை குட்டி ஒன்று சாலையின் நடுவே நீண்ட நேரம் அமர்ந்திருந்தது. நாயை கவ்வி வந்த சிறுத்தையை பின் தொடர்ந்து, குட்டி சிறுத்தையும் வனப்பகுதிக்குள் சென்றது. இப்பகுதியை சேர்ந்த பிரதீஷ் கூறுகையில்,''இந்த பகுதிக்கு அவ்வப்போது வந்து செல்லும் சிறுத்தைகள் நாய் மற்றும் பூனைகளை வேட்டையாடி செல்கிறது. வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,'' என்றார்.