மான் வேட்டையில் கைதான பழங்குடியின வாலிபர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு
ஊட்டி : மான் வேட்டையில் கைதான பழங்குடியின வாலிபர்களை வனத்துறையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோத்தகிரி அடுத்த கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட கூக்கல்தொரை பகுதியில் கடமான் வேட்டையாடப்பட்டதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர், அந்த பகுதிக்கு சென்று கடமான் இறைச்சியை காய வைத்துக் கொண்டிருந்த, 3 பேரை கைது செய்தனர். வேட்டையாட பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அவர்கள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், 26, குமார், 27, பிரகாஷ், 30, ஆகியோர் சுருக்கு கம்பி வைத்து மான் வேட்டையாடியது தெரியவந்தது. கைதான சதீஷ்குமார், குமார் ஆகியோர் இருளர் பழங்குடியினர் என்பதும், கூலி வேலைக்காக இங்கு வந்து தங்கி இருப்பதும் தெரியவந்தது.மான் வேட்டையில் கைதான பழங்குடியின வாலிபர்கள், 2 பேர் உட்பட 3 பேரை வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்டவர்கள் ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். 'வனத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.