உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீர் தட்டுப்பாட்டால் இடம் பெயரும் விலங்குகள் வறட்சியின் பிடியில் முதுமலை! தண்ணீர் திறந்து விட மின் துறைக்கு வனத்துறை கடிதம்

குடிநீர் தட்டுப்பாட்டால் இடம் பெயரும் விலங்குகள் வறட்சியின் பிடியில் முதுமலை! தண்ணீர் திறந்து விட மின் துறைக்கு வனத்துறை கடிதம்

கூடலுார்:முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் கடும் வறட்சியான காலநிலை நிலவுவதால், வன உயிரினங்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி, வனத்துறை சார்பில் மின்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில், கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்யவில்லை. இதனால், கோடைக்கு முன்பாக வறட்சியின் தாக்கம் துவங்கி உள்ளது. இதனால், தாவரங்கள் புற்கள் கருகி மரங்களில் இலைகள் உதிர்ந்து பசுமை இழந்து காணப்படுகிறது. வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. வறட்சியான பகுதிகளில் வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் வாகனங்களின் வாயிலாக தண்ணீர் எடுத்துச் சென்று, அங்கு கட்டப்பட்டுள்ள 'சிமென்ட்' தொட்டிகளில் ஊற்றி வருகின்றனர்.தொடர்ந்து, கோடை மழையும் ஏமாற்றி வருவதால், வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்து வரும் நீர் நிலைகளில், தண்ணீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், வனவிலங்குகளின் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மசினகுடி கோட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆறுகளுக்கு, மின் துறையின் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி, வனத்துறை சார்பில் மின்துறைக்கு கடிதம் எழுதி உள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'கடந்த ஆண்டு பருவ மழை குறைவு, காரணமாக நீர் நிலைகள் தண்ணீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு விரைவாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, நடப்பு ஆண்டு முன்ன தாகவே அணையில் இருந்து, வனப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கும்படி, மின்துறைக்கு கடிதம் எழுதி உள்ளோம். மேலும், வனப்பகுதிகளில் தீ பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய தீ தடுப்பு தொடர்பாக கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும், மின்துறை அதிகாரிகளை பங்கேற்க செய்து, தண்ணீர் பிரச்னை தொடர்பாக விளக்கப்படும். மேலும், வனத்துறை உயர் அதிகாரிகளிடம் இது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்த விடப்படும் என எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை