சங்க தலைவர் தேர்வில் குழப்பம் நீடிப்பு; தேயிலை ஏல மையத்தில் பணிகள் பாதிப்பு
குன்னுார்; குன்னுார் தேயிலை ஏல மையத்தில் தலைவர் தேர்வு செய்யப்படாத காரணத்தால் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.தென் மாநிலங்களில், 'குன்னுார் தேயிலை ஏல மையம், டீசர்வ், கோவை, கொச்சி,' என, நான்கு ஏல மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், குன்னுார் தேயிலை வர்த்தக சங்கம் நிர்வாகக் குழுவின் (சி.டி.டி.ஏ.,) கீழ் தேயிலை ஏலம் விடப்பட்டு வருகிறது. வாரந்தோறும், 15 லட்சம் முதல், 27 லட்சம் கிலோ வரை தேயிலை துாள் ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில், கடந்த, 2023 செப்., மாதம், தேயிலை கூட்ட தேர்தலில், 'தேயிலை விற்பவர்கள் 7; தேயிலை வாங்குபவர்கள் 7 ; புரோக்கர்கள் 2,' என, 16 ஓட்டுகளில், இரு தரப்பினரும், சமநிலை ஓட்டுக்கள் பெற்றதால், தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், வங்கி பரிவர்த்தனை பாதிப்பு ஏற்பட்டதால் தற்காலிகமாக மற்றொரு நபரை தேயிலை வாரியம் நியமித்தது. எனினும் அவர் ராஜினாமா செய்ததால்,குழப்பங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து தற்காலிக தீர்வு காணப்பட்டதால், தொடர்ந்து ஏலம் நடத்தப்பட்டது.இந்நிலையில், மீண்டும் தேர்தல் நடத்தி தலைவர் தேர்வு செய்யப்படாததால், ஏல மையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, புள்ளி விபரங்கள் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. எனவே, 'தேயிலை வாரியம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.