உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பருவமழையால் அணை, மின் நிலையங்களில்... பராமரிப்பு பணி!சாலைகளில் தடுப்பு சுவரும் அமைக்க முடிவு

பருவமழையால் அணை, மின் நிலையங்களில்... பராமரிப்பு பணி!சாலைகளில் தடுப்பு சுவரும் அமைக்க முடிவு

ஊட்டி:தென்மேற்கு பருவ மழை எதிரொலியாக மாவட்டத்தில் மலைகளுக்கு இடையே உள்ள அணை மற்றும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்கார நீர்மின் திட்டத்தின் கீழ், 'குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், மசினகுடி, மாயார்,' உள்ளிட்ட, 12 மின் நிலையங்கள் உள்ளன. அதேபோல், 'அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானி, பைக்காரா,' உள்ளிட்ட, 13 அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீர்மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், கோவை, ஈரோடு, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து பிற இடங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது,

அணைகளில் குறைந்த தண்ணீர்

கடந்தாண்டில் பருவ மழை பொய்த்ததால் அணைகளில் இருப்பில் இருந்த தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதால் அணைகளில் தண்ணீர் குறைந்தது. நடபாண்டிலும் ஏப்., இறுதிவரை மழை இல்லாததால் அணைகளில் தண்ணீர் இல்லாமல் மின் உற்பத்தி மேற்கொள்வதில் மின்வாரியம் திணறியது. தற்போது பெய்து வரும் மழையால் எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை. காலை, மாலை உச்ச மின் தேவையை பூர்த்தி செய்ய அப்பர்பவானி அணையில் இருப்பில் இருந்த தண்ணீரை குந்தா, கெத்தை, பில்லுார் அணைகளுக்கு ராட்சத குழாயில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அணைகளை முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைத்து மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பருவ மழை எதிரொலியால் பராமரிப்பு பணி

மாவட்டத்திலுள்ள மின் நிலையங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் மலைப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளன. பெரும்பாலான மின் நிலையங்கள் கட்டப்பட்டு, 60 ஆண்டுகளை கடந்து விட்டது. தற்போது தென்மேற்கு பருவ மழை துவங்கி இருப்பதால் பேரிடர் தடுப்பு நடவடிக்கையாக, அணை மற்றும் மின் நிலைய பகுதிகளில் பருவ மழையின் போது ராட்சத குழாய்கள் செல்லும் பாதைகளில் மண் சரிவை சரி செய்து தேவைப்படும் இடங்களில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

பணிகளில் சிறப்பு கவனம்

நீரோடைகளிலிருந்து வழி மாறி வரும் தண்ணீரால் அணைகளில் சேறும் சகதி அதிகரிப்பதை கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராட்சத குழாய் செல்லும் பாதையில் புதர்களை அகற்றி சீரமைப்பு பணிகள் நடக்கிறது. இப்பணிகள் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டத்தில் உள்ள அணைகள், மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதிக மழை பொழிவு உள்ள இடங்களான அப்பர் பவானி, காட்டுகுப்பை, எமரால்டு, அவலாஞ்சி, கெத்தை, பரளி, பில்லுார், பைக்காரா பகுதிகளில் உள்ள அணை, மின் நிலையங்களில் சிறப்பு கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'பருவ மழையின் போது பேரிடர் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளும் வழக்கமான பணி தான் நடந்து வருகிறது. சில பகுதிகளில் பணிகள் முடிவடைந்துள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ