| ADDED : டிச 01, 2025 04:49 AM
பந்தலூர்: கோடை காலத்தில் காட்டு தீ பரவலை தடுக்க, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கூடலூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது பிதர்காடு வன சரகம். தமிழக எல்லை மற்றும் முதுமலை புலிகள் காப்பகம், முத்தங்கா வனவிலங்கு காப்பகம் ஆகியவற்றை ஒட்டி அமைந்துள்ள, இந்த வனச்சரகத்தில் கோடை காலங்களில் ஏற்படும் காட்டு தீயை கட்டுப்படுத்த தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாநில எல்லையில் உள்ள வனப்பகுதி, கேரளா மாநிலம் செல்லும் சாலையோர வனப்பகுதி, குடியிருப்புகள் மற்றும் தனியார் தோட்டங்களை ஒட்டிய வனப்பகுதிகளில், அடி காடுகள் வெட்டப்பட்டு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. வனச்சரகர் ரவி மேற்பார்வையில், இந்த பணிகள் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது அகற்றப்பட்ட புற்கள் அனைத்தும், வனத்தின் உள்பகுதிக்குள் அகற்றியும், எதிர் தீ வைத்தும் பாதுகாப்பு கோடுகள் அமைத்து வருகின்றனர். இதன் வாயிலாக கோடை காலத்தில் காட்டுத்தீ பரவலால் வனம் மற்றும் வன விலங்குகள் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.