உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி: வனத்துறை தீவிரம்

தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி: வனத்துறை தீவிரம்

கூடலுார்: கூடலுார் வன கோட்டத்தில் கோடையில் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, 610 கி.மீ., துாரம் வரை தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கூடலுார் பகுதியில் கடந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட பருவமழை அதிகம் பெய்தது. இதனால், பருவ மழைக்கு பின்பும், வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது.இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில், பனிப்பொழிவின் தாக்கமும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால், தாவரங்கள், புற்கள் கருகி வனத்தீ அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், 610 கி.மீ., துாரம் வரை தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்ட பகுதியில் அகற்றப்பட்ட செடிகள் காய்ந்து, தீ ஏற்படும் ஆபத்து உள்ளதால், அப்பகுதியில் செயற்கை தீ ஏற்படுத்தி, தீ தடுப்பு கோடுகள் அமைத்து வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் கோடையில், வனத்தீ ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றோம். மேலும், நபார்டு, தீ தடுப்பு மேலாண்மை திட்டம், யானைகள் பாதுகாப்பு திட்ட நிதி மூலம், 610 கி.மீ., அளவுக்கு, தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கோடைகாலத்தில் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, பொதுமக்களும் வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்.வனத் தீ ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்களையும், அதுக்கு காரணமானவர்கள் குறித்த விவரத்தையும் வனத்துறைக்கு தெரிவித்து தீயை கட்டுப்படுத்த, ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை