உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விலை இல்லாததால் விரக்தி! மலையில் குறைந்து வரும் தேயிலை தோட்டங்கள்

விலை இல்லாததால் விரக்தி! மலையில் குறைந்து வரும் தேயிலை தோட்டங்கள்

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேயிலை செடிகளை அகற்றி, காய்கறிபயிர் செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. தவிர, நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில், மாவட்டத்திற்கு உரித்தான மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த, '25 ஆண்டுகளுக்கு மேலாக, 'பசுந்தேயிலைக்கு கட்டுப்படியான விலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை.

குறையும் தேயிலை தோட்டங்கள்

இதனால், விரக்தியின் விளிம்புக்கு விவசாயிகள் சென்றுள்ளனர். 'தேயிலை விலை வீழ்ச்சி ஒரு பக்கம்; தொழிலாளர் பற்றாக்குறை மற்றொரு பக்கம்,' என, சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஆண்டுதோறும் இடுப்பொருட்களின் விலையேற்றம் தொடர்வதால், விவசாயிகள் கூடுமானவரை தோட்டங்களை விற்பனை செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள், தேயிலை விலை வீழ்ச்சி பாதிப்பில் இருந்து தப்புவதற்காக, தேயிலை செடிகளை அகற்றி, மலை காய்கறி ரகங்களை பயிர் செய்ய நிலத்தை தயார் செய்து வருகின்றனர். இந்த பணி, கோத்தகிரியை தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சமீப காலமாக நடந்து வருகிறது.

மலை காய்கறி உற்பத்தி

இனி வரும் நாட்களில் வறட்சி அதிகரிக்கும் என்பதால், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, முள்ளங்கி மற்றும் பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகளுக்கு, நஷ்டமில்லாத விலை கிடைக்க வாய்ப்புள்ளது.இதனால், விவசாயிகள் கூடுமானவரை காய்கறி பயிர் செய்வதற்காக, நிலத்தை பண்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், 'தேயிலை நகரம்' என, அழைக்கப்படும் கோத்தகிரி மற்றும் குன்னுார், ஊட்டி புறநகர் பகுதிகள், குந்தா மற்றும் மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்களின் பரப்பளவு படிப்படியாக சுருங்கி வருகிறது.மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில், ''பசுந்தேயிலைக்கு கடந்த, 25 ஆண்டுகளாக விலை கிடைக்காமல் இருப்பது, மாவட்ட மக்கள் சமவெளிக்கு இடம் பெயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில், பசுந்தேயிலைக்கு விலை குறையும் நேரங்களில், தோட்டங்களில் ஊடுபயிராக விளைவிக்கும் ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் பீச் பழங்கள் விவசாயிகளுக்கு கை கொடுத்தன. வன விலங்குளின் தொல்லை, நோய் தாக்குதல் காரணமாக, தற்போது, தேயிலை தோட்டங்களில், படி மரங்களை காண்பது அரிதாகி விட்டது. இதே நிலை நீடித்தால், மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகிவிடும். விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்,'' என்றார்.

ஒரு 'கப்' தேநீருக்கு 20 ரூபாய்

தேயிலை விவசாயத்திற்கு பெயர் போன மாவட்டத்தில், சாதாரண கடைகளில் ஒரு கப் தேநீர், 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஓரளவு உயர்தர கடைகளில், 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராம புறங்களில் இருந்து நகர பகுதிக்கு வரும் ஏழை விவசாயி, ஒரு நாளுக்கு, 100 ரூபாய் வரை, தேநீருக்கு செலவிட வேண்டிய நிலை உள்ளது. அதே நேரத்தில், விவசாயி வினியோகம் செய்யும் ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 20 ரூபாய் விலை கிடைப்பதில்லை என்பது வேதனையான உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ