தோடர் கோவிலில் பிரார்த்தனை: பழங்குடியினருடன் கவர்னர் நடனம்
ஊட்டி;ஊட்டி முத்தநாடு மந்துதோடர் பழங்குடியினர் கோவிலில், மாநில கவர்னர் ரவி, மனைவியுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.மாநில கவர்னர் ரவி, நேற்று முன்தினம், நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வருகை தந்தார். கலெக்டர் அருணா மற்றும் எஸ்.பி., சுந்தரவடிவேல் ஆகியோர் வரவேற்றனர்.ஊட்டி ராஜ்பவனில் தங்கியுள்ள கவர்னர், தனது மனைவி லட்சுமியுடன் நேற்று காலை,11:00 மணிக்கு, ஊட்டி தலைகுந்தா அருகே உள்ள தோடர் பழங்குடியினர் மக்கள் வாழும் முத்தநாடு மந்து கிராமத்திற்கு சென்றார். அவருக்கு, தோடர் மக்கள் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்குள்ள 'தேக்கிஸ்' அம்மன் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பிறகு, கிராம இளைஞர் இளவட்ட கல்லை துாக்கியதை கண்டு கவர்னர் வியந்தார். கோவை இந்துஸ்தான் கல்லுாரி மாணவர்கள் மற்றும் கிராம மக்களுடன் கலந்துரையாடினார். தோடர் பழங்குடியினர் பெண்கள் காட்சிப்படுத்திய கைவினை பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து, தோடர் மக்களின் பாரம்பரிய நடனத்தை ரசித்த கவர்னர், அவர்களுடன் இணைந்து நடனமாடினார். பழங்குடி மக்களிடம் கவர்னர் ரவி பேசுகையில், ''நீலகிரியில் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த சுற்றுச் சூழல் தற்போது இல்லை. கடந்த, 10 ஆண்டுகளில் இயற்கை பெருமளவில் அழிக்கப்பட்டு வருகிறது. இயற்கையை பாதுகாப்பதில், பழங்குடியின மக்களின் பங்கு மகத்தானது. அதனால்தான், தோடர் பழங்குடியின மக்கள் வாழும் கிராமத்திற்கு விரும்பி வந்துள்ளேன். இங்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியான தருணம்,'' என்றார்.மாவட்ட கூடுதல் கலெக்டர் கவுசிக், நீலகிரி ஆதிவாசிகள் நல சங்க செயலாளர் ஆல்வாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.