உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்தை ஒட்டிய கிராமங்களில் தொடரும் மனித - விலங்கு மோதல்! தீர்வு கிடைக்காமல் அச்சத்தில் வாழும் மக்கள்

வனத்தை ஒட்டிய கிராமங்களில் தொடரும் மனித - விலங்கு மோதல்! தீர்வு கிடைக்காமல் அச்சத்தில் வாழும் மக்கள்

பந்தலுார் : பந்தலுார், கூடலுார் பகுதிகளில் வனத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் தொடரும்மனித- விலங்கு மோதல்களால் மக்கள் நிம்மதி இழந்துஉள்ளனர். கூடலுார் வருவாய் கோட்டம் இரண்டு தாலுகாவை உள்ளடக்கிய பகுதியாகும். இதனை சுற்றி, முதுமலை, பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள்; முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்; கூடலுார், நிலம்பூர், வயநாடு வன கோட்டங்கள் உள்ளன. கூடலுார், பந்தலுார் ஆகிய பகுதிகள் வனம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளதால் இங்கு வன உரியினங்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். கடந்த காலங்களில் இங்கு உருவாககப்பட்ட கிராமங்கள்; தனியார் மற்றும் அரசு தோட்ட நிறுவனமான 'டான்டீ' தேயிலை தோட்டங்கள்; அதனை சார்ந்த தொழிலாளர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டதால், வனப் பகுதிகள் குறைந்து, விலங்குகள் நடமாடும் பகுதிகள் தடைபட்டன. மேலும், கால மாற்றத்தால், கட்டடங்களின் எண்ணிக்கையும் அதிகமாகின. பல்வேறு காரணங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள், செடிகள் அழிக்கப்பட்டன.

சுருங்கிய விலங்குகளின் வாழ்விடங்கள்

இதனால், வன விலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கி அவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக குடியிருப்புகளை நோக்கி வர துவங்கின. குடியிருப்புகளை ஒட்டிய தேயிலை தோட்டங்கள், சிறு புதர்களுக்கு தஞ்சம் அடையும் விலங்குகள், அவைகளுக்கு எளிதாக வளர்ப்பு கால்நடைகள் உணவாக கிடைப்பதால், அதே பகுதியை தங்கள் வாழ்விடமாக மாற்றி கொண்டன. இதனால், மக்கள் நாள்தோறும் அச்சப்பட்டு வாழ வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் கிராமங்களில் கால்நடைகள் கொல்லப்படும் போது, ஆய்வுக்கு வரும் வன துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கால்நடை; மனிதரை தாக்கும் விலங்குகளை உடனடியாக பிடித்து வேறு அடர்ந்த வனப்பகுதிகளில் விட நடவடிக்கை எடுத்தால், மனித- விலங்கு மோதல் அதிகரிக்காது. சில நேரங்களில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தும் போது, விலங்குகளால் உயிர் பலிகள் அதிகரிக்கும் சூழல் உருவாகிறது. சமீபத்தில், பந்தலுார் அருகே சரிதா,43; 3 வயது குழந்தை நான்சி ஆகியோர் சிறுத்தை தாக்கி பலியானது இதற்கு உதாரணமாக கருதப்படுகிறது. இதற்கு பின் வனத் துறையினர் சிரமப்பட்டு சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

கள பணியாளர் ஆலோசனையும் முக்கியம்

இனிவரும் நாட்களில், இத்தகைய துயரங்களை தவிர்க்கும் வகையில், குடியிருப்பு பகுதிகளில், மனிதரை தாக்கும் வன விலங்கு நடமாட்டம் அறிந்தவுடன், அப்பகுதியை முழுமையாக அறிந்த, கீழ்மட்ட வன ஊழியர்கள்; வேட்டை தடுப்பு காவலர்களின் ஆலோசனைகளையும், உள்ளூர் மக்களின் கருத்துகளையும் வனத்துறை அதிகாரிகள் கேட்க வேண்டும். அதன்பின் உடனடியாக வன குழுவினர் நடவடிக்கை எடுத்தால், குறிப்பிட்ட விலங்குகளை விரைவில் பிடிக்க முடியும். மக்கள் கூறுகையில், 'கால்நடைகளை தாக்கும் போதே விலங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்காமல், மனித உயிர்கள் போன பின்னர், நிவாரணம் வழங்கி அஞ்சலி செலுத்தி என்ன பயன். இனி வரும் காலங்களில், வனத்துறை உயரதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை