| ADDED : மார் 14, 2024 11:32 PM
கோத்தகிரி:கோத்தகிரி நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, பெட்டட்டி அண்ணா நகர் கிராமத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை வணிக வளாகம் திறக்கப்பட்டது.கோத்தகிரி பகுதியில், கேரட், பீட்ரூட், முட்டை கோஸ், பீன்ஸ் மற்றும் முள்ளங்கி உள்ளிட்ட மலை காய்கறி பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.விளை பொருட்களை மேட்டுப்பாளையத்தில் உள்ள காய்கறி மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், போக்குவரத்து செலவு, ஏற்று இறக்கு கூலி, மண்டி கமிஷன் உள்ளிட்ட செலவினங்கள் விவசாயிகளுக்கு கூடுகிறது.இடை தரகர்களின் தலையீடு இல்லாமல், விலை பொருட்களை கட்டுப்படியான விலைக்கு விற்பனை செய்ய ஏதுவாக, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், பெட்டட்டி அண்ணா நகர் பகுதியில், 2 கோடி ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த வேளாண்மை வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டது.இதன் மூலம், காய்கறிகள் அழுகாமல் இங்கு இருப்பு வைத்து, தேவையான நேரத்தில் விற்பனை செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் திறப்பு விழா நடந்தது. வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் நிர்மலா மற்றும் கண்காணிப்பாளர் சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நடுஹட்டி ஊராட்சி மன்ற தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன் கட்டடத்தை திறந்து வைத்தார். இதில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.