மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
சூலுார்:'நிலத்தடி நீரில் உவர்ப்புத்தன்மையும், வேதி பொருட்கள் அதிகரித்து வரும் பிரச்னைக்கு, வேளாண் துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும்' என, கிராமப்புற விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.சூலுார், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்தொழில் பிரதானமாக உள்ளது.பல ஆயிரம் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள், ஆழ்துளை கிணற்றை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் தான் கிணற்று பாசனத்தை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் உவர்ப்பு மற்றும் வேதித்தன்மையால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இரு வட்டாரங்களை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலத்தடி நீரில், வேதித் தன்மையும், உவர்ப்பு தன்மையும் அதிகம் உள்ளது. இப்பகுதி விளை நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கிணறு மற்றும் போர்வெல்களிலிருந்து பெறப்படும் தண்ணீரை, விளைநிலங்களுக்கு தொடர்ந்து பாய்ச்சும் போது, உப்பு போன்ற படிமம் படிகின்றன. இதனால், காய்கறி சாகுபடியில் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. கால்நடைகள் குடிப்பதற்கே தயங்கும் நிலை உள்ளது. வேறு வழியில்லாமல் அந்த நீரை பயன்படுத்தியே விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் கூறியதாவது:விவசாயத்துக்கு பிரதானமானது தண்ணீர். தண்ணீர் நன்றாகவும், தேவையான அளவுக்கு கிடைத்தால் மட்டுமே விவசாயம் செழிப்பாக நடக்கும். உவர்ப்பு அதிகமாக உள்ள தண்ணீரை தொடர்ந்து சாகுபடிக்கு பயன்படுத்தும் போது, குறிப்பிட்ட காலத்துக்கு பின், சொட்டு நீர் குழாய்களில் உப்பு அடைத்துக் கொள்கிறது. சீராக தண்ணீர் செல்ல முடியாமல் தடைபடுகிறது. பிரதான குழாய்களிலும் இதே பிரச்னை ஏற்படுகிறது. மரங்களை சுற்றியுள்ள வட்டப்பாத்திகளிலும் உப்பு படிமம் படிகிறது. இதனால், மண் வளம் பாதிக்கப்படுகிறது. தென்னை மரங்களில் இலைக்கருகல் உள்ளிட்ட பாதிப்புகள் மரங்களுக்கு ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண, வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாற்று சாகுபடிக்கு வழியில்லாத விவசாயிகள், குறைந்த மகசூல் கிடைத்தாலும் தென்னை சாகுபடியையே தொடர்கின்றனர். வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், நிலத்தடி நீரின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்து அறிவிக்கின்றனர். ஆனால், குறைபாட்டை நிவர்த்தி செய்யும் தொலை நோக்கு திட்டங்கள், தொழில்நுட்பங்கள் எதையும் திட்டமிடுவது இல்லை. இதனால், விவசாயிகளின் வேதனை தொடர்கதையாக உள்ளது.
நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில், சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, நீரின் தன்மையை மேம்படுத்த அரசு துறைகள் இணைந்து செயல்பட வேண்டும். வேளாண் பல்கலை மற்றும் துறை சார்ந்த அனைத்து அமைப்புகளும் சேர்ந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்போது தான், அழிந்து வரும் விவசாயத்தை பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025