உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பார்க்கிங் பகுதியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு பூத்கள்.. கண்டுகொள்ள யாருமில்லை! அகற்றாத பட்சத்தில் பொதுநல வழக்கு தொடர முடிவு

பார்க்கிங் பகுதியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு பூத்கள்.. கண்டுகொள்ள யாருமில்லை! அகற்றாத பட்சத்தில் பொதுநல வழக்கு தொடர முடிவு

ஊட்டி; ஊட்டி நகரில் உள்ள பல 'பார்க்கிங்' பகுதிகளில் முளைத்துள்ள அனுமதியில்லாத ஆக்கிரமிப்பு பூத்களை கண்டு கொள்ளாமல் உள்ளதால், உள்ளூர் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் அவதிப்படும் சூழல் அதிகரித்து வருகிறது. ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. அதில் நகரப்பகுதியில் உள்ள, சேரிங்கிராசிலிருந்து எட்டின்ஸ், ஏ.டி.சி., சாலை வழியாக, மத்திய பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். தொடர்ந்து, அப்பர்பஜார், மெயின் பஜார், லோயர் பஜார், புளூமவுண்டன், காபிஹவுஸ் வழியாக கமர்சியல் சாலை செல்ல முடியும். கிராமப்புற பகுதி பஸ்கள் நிற்கும் தென்றல் பஸ் ஸ்டாப் மற்றும் கேசினோ சந்திப்பு, பிரீக்ஸ் பள்ளி சாலைகள் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர் பயன்படுத்தும் பகுதிகளாக உள்ளன. இங்குள்ள வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு, சுற்றுலா மையங்களுக்கு வெளியிடங்களிலிருந்து நாள்தோறும், 4 முதல் 6 ஆயிரம் வாகனங்கள் வருகின்றன. அதில், காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில், 3 ஆயிரம் வகனங்கள் தனியார் மற்றும் இலவச பார்க்கிங் பகுதிகளில் நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. வார இறுதி நாட்களில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து, 10 ஆயிரம் வாகனங்கள் வரும் போது, அதனை நிறுத்த இட பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், நகரின் பல்வேறு பகுதகிளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. புதிதாக வைக்கப்படும் பூத்கள் இந்நிலையில், நகரில் உள்ள, 5 பெரிய பார்க்கிங் தளங்களை தவிர, சில நகராட்சியின் சாலையோர இடங்களில், உள்ளூர் மக்களின் பயன்படுத்தும் விதமாக, இரு சக்கர வாகங்களை நிறுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய இடங்களில் சமீபகாலமாக புதிய, புதிய பூத்கள் இரவு நேரங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்டுகின்றன. இதனால், காலையில் வாகனங்களை நிறுத்தவரும் உள்ளூர் மக்கள் சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. பார்க்கிங் செய்ய இடமில்லை அதில், புளூ மவுண்டன் பகுதியில் தபால்நிலையம், ரேஷன் கடைக்கு செல்லும் பாதையை அடைத்து பல பெட்டி கடைகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, அங்கு புதிய பல பூத்துகள் போடப்பட்டுள்ளதால், வாகனங்களை நிறுத்த முடிவதில்லை. அதேபோல, ஊட்டி நகராட்சி மார்க்கெட் கேட் பகுதியில் நடைபாதையில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும் பகுதியில், பல பூத்கள் போடப்பட்டுள்ளன. அதனால், சாலையில் வாகனங்களை நிறுத்த வேணடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிரீக்ஸ் சாலையில் உள்ள நகராட்சி கட்டண 'பார்க்கிங்' பகுதியில் சில நாட்களுக்கு முன்பு, புதிய ஆக்கிரமிப்பு பூத் போடப்பட்டுள்ளது. மேலும், ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட் பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்களை முறையாக நிறுத்த முடியாமல் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து உள்ளூர் வாகன உரிமையாளர்கள் பலர், மாவட்ட கலெக்டர், நகராட்சி கமிஷனரிடம் பல முறை புகார் மனு அளித்தும், எவ்வித தீர்வும் காணப்படவில்லை. வக்கீல் ஸ்ரீஹரி கூறுகையில், ''இந்த பூத்கள் எதற்காக வைக்கப்பட்டுள்ளன என்பதை நகராட்சி நிர்வாகம் தெளிவு படுத்தவேண்டும். இல்லையெனில், நகராட்சி நிர்வாகத்தின் மீது பொது நல வழக்கு தொடரப்படும்,' என்றார். ஊட்டியி நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், ''ஊட்டி நகராட்சிக்கு சமீபத்தில் தான் பொறுப்பேற்றுள்ளேன். விரைவில் வார்டு வாரியாக நகரில் ஆய்வு மேற்கொண்டு, எவ்வித அனுமதியும் இன்றி வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு பூத்கள், கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி பாரபட்சம் காட்டாமல் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை