உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானைகளை துரத்த கும்கிகள் தயார்

காட்டு யானைகளை துரத்த கும்கிகள் தயார்

பந்தலுார் : பந்தலுார் அருகே சேரம்பாடியில் சுற்றிவரும் காட்டு யானைகளை துரத்துவதற்கு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. பந்தலுார் அருகே சேரம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 20 யானைகள் முகாமிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. அதில், 'புல்லட் மற்றும் கட்டை கொம்பன்' என்று அழைக்கப்படும் இரண்டு யானைகள் ஒன்றாக உலா வருகிறது. இந்த இரண்டு யானைகளும் இரவில் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் சாலை மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்து அச்சுறுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் சப்பன்தோடு என்ற இடத்தில் குஞ்சுமுகமது என்பவரை இந்த இரண்டு யானைகளும் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனையடுத்து மக்கள் நடத்திய போராட்டத்தில், 'கும்கி யானைகளை கொண்டு, இரண்டு யானைகளையும் அடர்வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தனர். தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் விஜய் மற்றும் வசீம் ஆகிய யானைகள், சேரம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் சுற்றி வரும் காட்டு யானைகளை துரத்துவதற்கு வரவழைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை முதல் யானைகளை துரத்தும் பணியில் இரண்டு யானைகளும் ஈடுபட உள்ளன.

உயிர் தப்பிய முதியவர்

பந்தலுார் சேரம்பாடி சப்பந்தோடு பகுதியை சேர்ந்தவர் ராமன்,65. நேற்று காலை, 6:30 மணிக்கு வழக்கம் போல், தேயிலை தோட்டம் வழியாக வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, ஆற்றை கடக்க பாலத்தில் ஏறி நடந்த போது, ஆற்றின் மறு கரையில் மறைவான பகுதியில் நின்றிருந்த யானை துதிக்கையால் அவரை தாக்கியுள்ளது. அப்போது, அருகில் உள்ள புதரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிள்ளார். அவரது வலது கை மற்றும் காலில் அடிபட்டது. உடனடியாக வனத்துறையினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை