குறுவள மைய கலை திருவிழா; ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு
கோத்தகிரி; மாநில அரசு, நான்கு ஆண்டுகளாக கலை திருவிழா நடத்தி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்று முதல் பிளஸ்-2 வகுப்பு பயிலும் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தி வருகிறது. குறுவட்டம், வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகளில் சிறப்பிக்கும் மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அதன்படி, கலைத் திருவிழா போட்டிகள், கோத்தகிரி குறு வள மையம் சார்பில், வட்டார வளமையத்தில் துவக்கப்பட்டது. கோத்தகிரி நகராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பாகீரதி, ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முருகேசன் மற்றும் மேற்பார்வையாளர் ராஜ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்க நிலை சிறுவர்களுக்கு, ஓவியம், களிமண் வேலைப்பாடு, திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் பாடல் உள்ளிட்ட, 18 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் நாள் போட்டியில், கட்ட பெட்டு, ஒரசோலை, நல்லாயன், கோத்தகிரி சி.எஸ்.ஐ., மற்றும் அரவேனு ஜி.டி.ஆர்., 50 மாணவர்கள் பங்கேற்றனர். நாட்டுப்புற கலைஞர் கணேசன், ஆசிரியர்கள் நிர்மலா தேவிநிஷா மற்றும் ருசியா ஆகியோர் நண்பர்களாக செயல் பட்டனர். போட்டியை, ஒரசோலை பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் ஆசிரியர்கள் தினகரன், ஹேரி உத்தம் சிங், ஜெனிஷ்குமார் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.