ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க போராடும் கூலித்தொழிலாளி
கூடலுார்; கூடலுார் ஓவேலி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி, நீக்கப்பட்ட தன் பெயரை, மீண்டும் ரேஷன் கார்டில் சேர்க்க, 10 ஆண்டுகளாக போராடி வருகிறார். கூடலார் ஓவேலி, நீயூஹோப் பகுதியில், வசித்து வந்த ராஜேந்திரன், 61. இவர் கடந்த, 2015ல், குடும்பத்துடன், ஓவேலி பாரதி நகருக்கு சென்று வசித்து வருகிறார். இவருக்கு மனைவி வள்ளியம்மா மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் வீட்டை மாற்றும்போது, பார்வுட் ரேஷன் கடையில் இருந்து, பாரதிநகர் ரேஷன் கடைக்கு கார்டை மாற்றி உள்ளார். அப்போது, ரேஷன் கார்டில் ராஜேந்திரன் பெயரை நீக்கி உள்ளனர். இதனை அறிந்து, தனது பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க கோரி, அதிகாரிகளுக்கு கடந்த, 10 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறார். பெயரை சேர்க்க முடியவில்லை. ராஜேந்திரன் கூறுகையில், ''எனது மனு குறித்து சென்னை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பெயர் சேர்ப்பது குறித்து அவர்கள் முடிவு செய்வர் என அதிகாரிகள் கூறுகின்றனர்,'' என்றார். அதிகாரிகள் கூறுகையில், 'இவரின் பெயரை ரேஷன் கார்டில் சேர்ப்பது குறித்து, உயர் அதிகாரிகளின் உத்தரவு கிடைத்தவுடன் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என்றனர்.