உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வருவாய் இழப்பு: மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு

வருவாய் இழப்பு: மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு

கூடலுார் : கூடலுார் நகராட்சி கூட்டம், தலைவர் பரிமளா தலைமையில் நடந்தது. கமிஷனர் பிரான்சிஸ் சேவியர் முன்னிலை வகித்தார்.கவுன்சிலர் லீலாவாசு, 'தன் வார்டுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை' என, குற்றம் சாட்டி குடத்துடன் கூட்டத்தில் பங்கேற்றார்.உஸ்மான்: கடந்த மாத மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த நகல் வழங்க வேண்டும்.ராஜந்திரன்: நிர்வாகத்தின் செயல்பாடு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. கவுன்சிலர் கோரிக்கை நிறைவேற்றப்படுவதில்லை. எந்த வளர்ச்சி பணி நடப்பதில்லை. குடிநீர், தெரு விளக்கு பிரச்னைகள் தொடர்கிறது. குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. நடைபாதை ஆக்கிரமிப்பு தடுக்க நடவடிக்கை இல்லை. குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டுமே பணிகள் ஒதுக்கப்படுகிறது.துணை தலைவர் சிவராஜ்: பொது நிதியில், பணிகள் ஒப்பந்தம் விடுவதை சிலர் தடுக்கின்றனர்.வெண்ணிலா: எனது வார்டு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. உஸ்மான்: குப்பைகளை அகற்ற ஒப்பந்தம் எடுத்துள்ள நபர், மாமிச கழிவுகளை நகராட்சிக்கு தெரியாமல், கேரளாவை சேர்ந்த நபருடன் ஒப்பந்தம் போட்டு, நாள்தோறும், 3000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகிறார். இதன் மூலம் நகராட்சிக்கு மாதம், 90 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது.அனுப்கான்: நகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதால், குப்பையை அகற்ற வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். துணை தலைவர்: இந்த செயலால் நகராட்சிக்கு கெட்ட பெயர். எனவே, ஒப்பந்தம் ரத்து குறித்த தீர்மானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.தலைவர்: ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. புகார் தொடர்பாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இதை ஏற்காமல் கவுன்சிலர்கள் சிறிது நேரம் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கமிஷனர்: இது தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு 'நோட்டீஸ்' வழங்கப்படும்.தொடர்ந்து தீர்மானங்கள் குறித்து விவாதங்கள் நடந்தது. துணை தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்