| ADDED : மார் 20, 2024 10:29 PM
அன்னுார் : பால் உற்பத்தியாளர்களின், 49 நாள் நிலுவை ஊக்கத் தொகையில், 29 நாள் ஊக்கத் தொகை நேற்று வழங்கப்பட்டுள்ளது.'தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு, பால் வழங்கிவரும் பால் உற்பத்தியாளர்களுக்கு, பசும்பால் மற்றும் எருமை பாலுக்கு ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்,' என தமிழக அரசு கடந்த டிச. 18ம் தேதி அறிவித்தது. இதன்படி ஜன. 31ம் தேதி வரை வழங்கப்பட்ட பாலுக்கு பிப். 11ம் தேதி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. அதன் பிறகு 49 நாட்கள் ஆகியும் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் இயக்குனர், 'நிதி வசதி உள்ள சங்கங்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பின்னர் அரசு வழங்கும்,' என தெரிவித்தார்.எனினும் ஒரு சில சங்கங்கள் மட்டுமே பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கின. அன்னுார் வட்டாரத்தில் உள்ள ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கி வரும், அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் பிப். 1ம் தேதி முதல் பிப். 29ம் தேதி வரை வழங்கப்பட்ட பாலுக்கான ஊக்கத்தொகை நேற்று அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதையடுத்து பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.'எனினும் மார்ச் 1 முதல் 20ம் தேதி வரை வழங்கப்பட்ட பாலுக்கு விரைவில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,' என்றனர்.