உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 110 கே.வி., துணை மின் நிலையமாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு

110 கே.வி., துணை மின் நிலையமாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு

கூடலுார்: -கூடலுாரில், பயன்பாட்டில் உள்ள 66 கே.வி., துணை மின் நிலையத்தை, 110 கே.வி., திறன் கொண்ட துணை மின் நிலையமாக மாற்ற வலியுறுத்தியுள்ளனர். கூடலுார், பந்தலுார் பகுதியில் அதிகரித்து வரும், மின் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் கூடலுார், உப்பட்டி, சேரம்பாடி பகுதியில் உள்ள 66 கே.வி., துணை மின் நிலையங்களை 110 கே.வி., துணை மின் நிலையமாக மாற்ற முடிவு செய்தனர். முதல் கட்டமாக கூடலுார் தேவர்சோலை சாலை, மைக்காமவுண்ட் பகுதியில், 110 கே.வி., துணை மின் நிலையம் அமைக்கும் பணி, 2008ல் துவங்கப்பட்டது. இதற்காக, கிளன்மார்க்கன் மின் நிலையத்திலிருந்து கூடலுார் வரை மின் விநியோகம் செய்வதற்காக மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. வனத்துறை தடை உள்ளிட்ட காரணங்களால் பணிகள் முழுமை பெறவில்லை. இதனால், கூடலுாரில், 110 கே.வி., துணை மின் நிலையம் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனிடையே, அத்திப்பாளியில் செயல்பட்டு வந்த 66 கே.வி., துணை மின் நிலையம், மைக்கா மவுண்ட் பகுதிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, அதனை 110 கே.வி., துணை மின் நிலையமாக மாற்றும் வகையில், சிங்கார - கூடலுார் இடையே, உயிர் மின் அழுத்த கம்பிகள் மாற்றப்பட்டது. தொடர்ந்து, ''10 கே.வி., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு மின் சப்ளை வழங்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'கூடலுாரில் நிலவும் மின் பிரச்னைக்கு தீர்வாக, 66 கே.வி., துணை மின் நிலையத்தை, 110 கே.வி., துணை மின் நிலையமாக மாற்ற வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர் அதிகாரிகள் கூறுகையில், 'கூடலுார், உப்பட்டி, சேரம்பாடியில் உள்ள 66 கே.வி., துணை மின் நிலையங்களை 110 கே.வி., துணை மின் நிலையமாக மாற்ற திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி கிடைத்தவுடன், அவை 110 கே.வி., திறன் கொண்ட துணை மின் நிலையங்களாக மாற்றப்படும். தொடர்ந்து, மூன்று துணை மின் நிலையங்களிலும் 110 கே.வி., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு, மின் சப்ளை வழங்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி