| ADDED : டிச 01, 2025 04:48 AM
பந்தலூர்: பந்தலூர் அருகே, குடியிருப்புகளுக்கு மத்தியில் பன்றி வளர்ப்பு கூடம் நடத்துவதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பந்தலூர் அருகே புஞ்சைவயல் கிராமம் மற்றும் நெல்லியாளம் டான் டீ தொழிலாளர்கள் குடியிருப்புகள் அமைந்து உள்ளது. இங்கு உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில், பன்றி வளர்ப்பு கூடம் செயல்பட்டு வருகிறது. பன்றிக்கு உணவாக அழுகிய கோழி கழிவுகளும், உணவுக் கழிவுகளும் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், பன்றிகளின் கழிவுகளும், வெளிப்பகுதியில் திறந்து விடப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. சமீப காலமாக பன்றி காய்ச்சல், ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வரும் நிலையில், கேரளாவில் பன்றி வளர்ப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில், எந்தவிதமான அனுமதியும் இன்றி வளர்ப்பு கூடம் செயல்பட்டு வருவதும், துர்நாற்றம் மற்றும் நீரோடைகளில் கலக்கும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் கூறுகையில், பன்றிகளால் பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில், குடியிருப்புகளுக்கு மத்தியில் வட மாநில தொழிலாளர்களை கொண்டு, பன்றி வளர்ப்பு கூட நடத்தி வருவதால், பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், பன்றி வளர்ப்பு கூட உரிமையாளருக்கு ஆதரவாகவே அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். பன்றி வளர்ப்பு கூடத்தை தடை செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.