| ADDED : ஜன 18, 2024 10:14 PM
பந்தலுார் : பந்தலுார் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பொங்கல் புத்தாடைகள் வழங்கப்பட்டன.பந்தலுார் அருகே பத்தாம் நம்பர் பழங்குடியின கிராமத்தில், 'சில்ரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட்' சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகி விஷ்ணு தலைமை வகித்தார். கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்து பேசுகையில், ''பழங்குடியின குழந்தைகளை தினசரி அங்கன்வாடிக்கு அனுப்புவது வழக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் துாண்டப்பட்டு தொடர்ச்சியாக பள்ளிக்கு சென்று படிப்பில் நாட்டம் செலுத்த முடியும்,'' என்றார். 'ஏகம் பவுண்டேஷன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் பேசுகையில், ''குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த உதவிகள் தேவைப்பட்டால், அதற்கான உதவிகள் வழங்கப்படும். குழந்தைகள் படிப்பதற்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்,'' என்றார்.தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கு பெட்ஷீட், வேஷ்டி, சேலை மற்றும் குழந்தைகளுக்கான உடைகள் உள்ளிட்ட புத்தாடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவ்ஷாத், சமூக ஆர்வலர்கள் கண்ணன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.