| ADDED : நவ 22, 2025 05:10 AM
பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை ஒட்டி பந்தலூர் பஜார் பகுதி அமைந்துள்ளது. பஜாரிலிருந்து மைதானம் வழியாக செல்லும் சாலையை ஒட்டி கழிவுநீர் கால்வாய் அமைந்து உள்ளது. இந்த கால்வாய்களை சுத்தம் செய்யாத நிலையில், கழிவுகள் மற்றும் தண்ணீர் தேங்கி நின்று கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. கால்வாயை புதர் சூழ்ந்துள்ளதால், கழிவு தேங்கிநோய் பரப்பும் இடமாக மாறி வருகிறது. கால்வாயில் இருந்து எழும் துர்நாற்றம், வயோதிகர்கள் மற்றும் குழந்தைகளை அதிக அளவில் பாதித்து வருகிறது. மக்கள் கூறுகையில், 'கால்வாயை ஒட்டி குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், கழிவுகள் தேங்கி நின்று, கழுவு நீர் குடிநீரில் கலந்து பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. கால்வாயில் எழும் துர்நாற்றத்தை சுவாசித்தால், தொண்டை மற்றும் வயிற்று பகுதியில் அலர்ஜி ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகிறோம். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தோம். எவ்வித நடவடிக்கையும் இல்லை.