மண் பாதையாக மாறிய தேசிய நெடுஞ்சாலையால்... கடும் அதிருப்தி!நாள்தோறும் மூன்று மாநில வாகனங்கள் தடுமாற்றம்
கூடலுார்:கூடலுார் - கோழிக்கோடு தேசிய நெடுஞ் சாலையில் சேதமடைந்த பகுதியில், தற்காலிக சீரமைப்பு பணிக்காக மண் கொட்டியதால், அப்பகுதி மழையால் மண் பாதை போன்று மாறி, சுற்றுலா வாகனங்கள் தடுமாற வேண்டிய அவலம் ஏற்பட்டது. நீலகிரியின் சுற்றுலா தலங்களை பார்க்க வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. கேரளா, கர்நாடக சுற்றுலா பயணிகள் கூடலுார் வழியாக வந்து செல்கின்றனர். இங்கு வரும் வெளி மாநில வாகனங்களுக்கு, தமிழக - கேரளா எல்லையில், நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை சில்வர் கிளவுட், தெப்பக்காடு சாலையில் மசினகுடியில் அமைக்கப்பட்டுள்ள இ--பாஸ் சோதனை மையங்களில் பசுமை வரி வசூல் செய்து வருகின்றனர். அங்கு தொரப்பள்ளி முதல் ஊசிமலை வரையிலான தேசிய நெடுஞ்சாலை, கூடலுார் செம்பாலா வரையும்; நாடுகாணி முதல் தமிழக -- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி வரையும் சாலை சேதமடைந்த பல மாதங்கள் கடந்தும் சீரமைக்க நடவடிக்கை இல்லை. மண்கொட்டி சீரமைப்பு பணி இந்நிலையில், பள்ளிப்படி, இரும்புபாலம் அருகே, கோழிக்கோடு சாலையில் சேதமடைந்த பகுதியில், நெடுஞ்சாலை துறையினர் மண் கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர். மழையின் போது சேறும், சகதியுமாக மாறி தார் சாலை, மண் பாதை போன்று மாறியது. சேதமடைந்த சாலைகளை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், தமிழகம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தரமான பணி எப்போது? சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'கடந்த, 10 நாட்களாக, கேரளா, கர்நாடாவில் இருந்தும் பல்லாயிரம் வாகனங்கள் வந்துள்ளன. ஒரு லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இப்பகுதியில் சேதமடைந்த சாலையை ஓராண்டுக்கு மேலாக தரமாக சீரமைக்கவில்லை. மண் கொட்டி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். இப்பகுதியை மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு செய்து, தரமாக இந்த சாலையை சீரமைக்கும் வரை வெளிமாநில வாகனங்களுக்கு நுழைவு கட்டணம், பசுமை வரிவசூல் செல்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,' என்றனர். மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைசாமி கூறுகையில்,''கோழிக்கோடு சாலையில், கூடலுார், செம்பாலா, நாடுகாணி, கீழ்நாடுகாணி வரை சீரமைக்க, 7.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி டெண்டருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கப்படும். மண் கொட்டப்பட்டதாக கூறப்படும் பகுதியில் ஜல்லி கற்கள் கொட்டி சீரமைக்கப்படும்,'' என்றார். தேசிய நெடுஞ்சாலை உதவி செயற் பொறியாளர் முரளி கூறுகையில்,''தொரப்பள்ளி முதல் ஊசி மலை வரை, சேதமடைந்த சாலையை, பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கப்படும். திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும். நிதி ஒதுக் கப்பட்டவுடன் பராமரிப்பு பணிகள் துவங்கப்படும். அதுவரை சேதமடைந்த பகுதிகள் தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.