| ADDED : மார் 05, 2024 11:37 PM
பந்தலுார்:பந்தலுார் அருகே வாகனங்கள் செல்ல முடியாத வனப்பகுதியில் உள்ள கிளன்ராக் பழங்குடியின கிராமத்துக்கு, 9 கி.மீ., நடந்து சென்ற மருத்துவ குழுவினர் குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர்.பந்தலுார் அருகே கிளன்ராக் வனப்பகுதி அமைந்துள்ளது. பஜாரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள இந்த பகுதியில் காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு வாகனங்கள் சென்று வருவதற்கு, போதிய சாலை வசதி இல்லாத நிலையில், மக்கள் நடந்து, பந்தலுார் பகுதிக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.இந்நிலையில், 5 -வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், இப்பகுதி மக்கள் வெளியில் செயல்பட்ட முகாம்களுக்கு செல்ல முடியாமல் இருந்தனர்.வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் மேற்பார்வையில், கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராதிகா, கவுரிசங்கர், கிராம சுகாதார செவிலியர் வனிதா, மக்களை தேடி மருத்துவ குழு செவிலியர் நந்தினி, ஆஷா பணியாளர் அஸ்மா, உதவியாளர் கிரி மற்றும் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர் கூத்தையன் உள்ளிட்ட குழுவினர், கிராமத்திற்கு, 9 கி.மீ., நடந்து சென்றனர்.அங்குள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதுடன், மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினர். அவர்களுக்கு பழங்குடியின மக்கள் நன்றி கூறினர்.