போட்டி தேர்வர்களுக்கு நேர மேலாண்மை அவசியம்; நுாலகத்தில் நடந்த கருத்தரங்கில் தகவல்
பந்தலுார் ; பந்தலுார் கிளை நுாலகத்தில் 'வெற்றிக்கு வழி'எனும் தலைப்பில் போட்டி தேர்வர்களுக்கு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. நுாலகர் அறிவழகன் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.அதில், சவீதா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் முனைவர் அசோக்குமார் பேசுகையில், ''கடந்த காலங்களை போல் அல்லாமல் தற்போது தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, போட்டி தேர்வு களில் சாதிக்க போதிய பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடித்து, சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்தால் கண்டிப்பாக சாதனையாளர்களாக மாற முடியும்,'' என்றார்.மத்திய அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற சவுந்தர்யா பேசுகையில், ''தனியாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது. எனவே, மக்களுக்கு சேவையாற்றும் வகையிலான பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் படித்தேன். தொடர்ந்து படித்ததன் விளைவாக தேர்வில் என்னால் சாதிக்க முடிந்தது,''என்றார். தொடர்ந்து, முதுநிலை வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் பேசினார். ஏற்பாடுகளை நுாலகர் தலைமையில், அம்பிகாதேவி, சரஸ்வதி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்கள் பங்கேற்றனர். தன்னார்வ தொண்டு நிறுனவங்களின் நிர்வாகிகள் சிவசுப்ரமணியம், நுாலகர் நித்யகல்யாணி, அஜித், நவ்ஷாத், ரஞ்சன் விக்னேஷ் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் அன்வர் நன்றி கூறினார்.