ஊட்டி: 'ஊட்டி பெம்பட்டி கிராமத்திற்கு, அரசு பஸ்சை முறையாக இயக்க வேண்டும்,' என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஊட்டி பெம்பட்டி கிராமத்தில், 200 குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு காலை, 10:30 மணிக்கு இயக்கப்படும் அந்த பஸ், அங்கிருந்து கோவைக்கும் இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட பஸ், முறையாக இயக்கப்படுவதில்லை. அதேபோல, பகல், 2:30 மணிக்கும், மாலை, 4:00 மணிக்கும் இயக்கப்பட்ட, இரு பஸ்களும் முறையாக இயக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. இந்த, மூன்று பஸ்களையும், 'பெண்கள் விடியல் பயணத்திற்கு ஏற்றவாறு, கிராமத்திற்கு முறையாக இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, 100 பேர் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 'முறையாக அரசு பஸ் இயக்கப்படும்,' என, உறுதி அளித்ததை தொடர்ந்து, மக்கள் கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.