ஊட்டி: 'நீலகிரி கூட்டுறவு சங்கத்தை தோற்றுவித்த ஆரிகவுடரின் சேவையை போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தை என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனத்தை தோற்றுவித்த ஆரிகவுடரின், 132-வது பிறந்தநாள் விழா, ஊட்டியில் உள்ள என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆரிகவுடர் நினைவு விழாக்குழு தலைவரும், படுக தேச பார்ட்டி நிறுவன தலைவருமான மஞ்சை மோகன் தலைமை வகித்தார். ஆரிகவுடரின் சிலைக்கு, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மஞ்சை மோகன் நிருபர்களிடம் கூறுகையில்,''படுகர் சமுதாயத்தின் முதல் பட்டதாரியும், முதல் எம்.எல்.சி.,யாகவும், முதல் எம்.எல்.ஏ.,வும் ஆரிகவுடர் பதவி வகித்தார். மாவட்டத்தில் பிரதான காய்கறி பயிர்களாக விளங்கிய உருளைகிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்து லாபம் பெறும் வகையில் கடந்த, 1935ல் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தை ஆரி கவுடர் தோற்றுவித்தார். இதன் தற்போதை மதிப்பு, 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். ஆரிகவுடரின் சேவையை போற்றும் வகையில் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்,'' என்றார். ஆரிகவுடர் பிறந்த நாளை முன்னிட்டு, ஊட்டி நகராட்சி சந்தையில் உள்ள என்.சி.எம்.எஸ்., காய்கறி ஏல மையத்தில் அவரின் புகைப்படம் மலை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், என்.சி.எம்.எஸ்.நிறுவன மேலாண்மை இயக்குனர் முத்துக்குமார், விங் கமாண்டர் ஜெயப்பிரகாஷ், தாரா ஜெயபிரகாஷ். ஆரிகவுடர் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் நடராஜன்,பொருளாளர் மகாலிங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.