மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
ஓசி மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
14-Sep-2025
பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டம் வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம் தெற்கு, தேவையூர், ரஞ்சன்குடி, வி.களத்துார், விசுவக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 1,000த்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தங்கள் சொந்த சொத்துக்களை பத்திரப் பதிவு செய்ய முடியாமல், வக்பு வாரியம் தடை விதித்துள்ளதை நீக்க வலியுறுத்தி, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை, கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.விசுவக்குடி குதரத் துல்லா கூறியதாவது: பெரம்பலுார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 1,000த்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களுக்கு, 2020 பிப்., ௧8ம் தேதி முதல் வக்பு வாரிய சொத்துக்கள் என்று கூறி பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்படுகிறது.இதனால், எங்களுக்கு சொந்தமான சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை.வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை மட்டும் பத்திரப்பதிவு செய்ய ஆட்சேபனை தெரிவிக்காமல், கிராமத்தில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.இதனால் எங்களின் அடிப்படை சொத்துரிமை பாதிக்கப்பட்டு, எங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவும், ஈடு வைப்பதற்கும், அடமானம் செய்து வங்கி கடன் பெறுவதற்கும் முடியவில்லை. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அரசு எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை.வக்பு வாரியத்தின் ஆட்சேபனையை நீக்கும் வகையில், உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.வாலிகண்டபுரம் அமீர்கான்: வாலிகண்டபுரம், வல்லாபுரம், தம்பை கிராமத்தில், 400 முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடு, நிலம் என எதையும் பத்திர பதிவு செய்ய முடியவில்லை. இது தொடர்பாக முதல்வர் வரை மனு கொடுத்துள்ளோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்கள் சமுதாய மக்களை அலைகழிக்கின்றனர்.திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை, ஜீயபுரம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் இதுபோன்ற பிரச்னை இருந்தது. பா.ஜ., கட்சியை சேர்ந்த எச்.ராஜா மற்றும் அமைச்சர் நேரு தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டனர்.இப்போது, அங்கு பத்திரப்பதிவு செய்ய முடிகிறது. இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.மேட்டுபாளையம் செல்லமுத்து: மேட்டுபாளையம் மற்றும் வாலிகண்டபுரம் கிராமத்தில், ராஜேந்திரன், செல்லமுத்து முருகேசன், சம்பத், நந்தகோபால் உள்ளிட்ட 85 பேரின் 45 ஏக்கர் நிலங்கள் வக்பு வாரிய சொத்துக்கள் என உள்ளது. என் தாத்தா காலத்தில் இருந்து நாங்கள் அனுபவித்து வரும் நிலங்கள் எங்கள் அனுபவத்தில் இருந்தாலும், அதை விற்கவோ, அடகு வைக்கவோ, எங்கள் வாரிசுகளுக்கு பெயர் மாற்றவோ செய்ய முடியவில்லை. காரணம் வக்பு வாரியம் தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக நாங்களும் பல ஆண்டு காலமாக கலெக்டர், அமைச்சர் என உயரதிகாரிகளை நேரில் பார்த்தும், கடிதம் மூலமாகவும் புகார் கொடுத்துவிட்டோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.ரஞ்சன்குடி அமீர்பாஷா: என் அப்பா உயிருடன் இருந்த போது, 25 ஆண்டுகளுக்கு முன் 8 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அதை நாங்கள் இதுவரை அனுபவித்து வருகிறோம். அதை தற்போது, பாகப்பிரிவினை செய்து நான்கு பேரின் பெயரில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்தோம். ஆனால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. காரணம் கேட்டபோது உங்கள் இடம் வக்பு வாரிய தடையில் உள்ளது என்கின்றனர்.இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025
14-Sep-2025