உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / போனில் பேச விடாமல் இடையூறு செய்ததால் கடுப்பில் மாணவியை கடித்த விடுதி சமையலர்

போனில் பேச விடாமல் இடையூறு செய்ததால் கடுப்பில் மாணவியை கடித்த விடுதி சமையலர்

பெரம்பலுார் : மொபைல் போனில் பேசுவதற்கு இடையூறாக சத்தம் போட்ட மாணவியரை, விடுதி சமையலர் கடித்து காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பெரம்பலுார் மாவட்டம், பெரியவடகரை கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகள் கவுசல்யா, 14. பசும்பலுாரை சேர்ந்தவர் ஏழுமலை மகள் ஸ்ரீமதி, 12. இருவரும் வெண்பாவூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் முறையே 8 மற்றும் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர்.இவர்கள் விடுதியில், நுாத்தப்பூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மனைவி செல்வி, 40, சமையலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு விடுதியில் சமைக்க ஊற வைத்திருந்த அரிசியை, செல்வி கையில் எடுத்து கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டு, மீத அரிசியை ஊற வைத்திருந்த பாத்திரத்தில் போட்டுள்ளார். இதைப்பார்த்த மாணவியர், செல்வி அரிசியில் எச்சில் துப்பி விட்டதாக வார்டன் சங்கீதாவிடம் புகார் கூறினர்.எச்சில்பட்ட அரிசியை கீழே கொட்டிவிட்டு, வேறு அரிசியை ஊற வைத்து சமைக்குமாறு சங்கீதா கூற, செல்வி சமைக்க மறுத்தார். வார்டன் பலமுறை சமைக்க சொல்லியும் கேட்காததால், வார்டன் உத்தரவுபடி, அதே விடுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றும் எசனை கிராமத்தை சேர்ந்த ரெங்கநாயகி, 43, சமைத்து, மாணவியருக்கு மதிய உணவு வழங்கினார்.இதனால் மாணவியர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த செல்வி, மதியம், 2:15 மணியளவில் விடுதி வளாகத்தில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாணவியர் விளையாடிக் கொண்டிருந்தனர்.திடீரென கடுப்பான செல்வி, 'போன் பேச விடாமல் ஏன் இப்படி கத்திக் கொண்டிருக்கிறீர்கள்?' என மாணவியரை திட்டி, அவர்களை நோக்கி கல்லை எரிந்தார். இதில் கவுசல்யா மீது கல் பட்டது. தட்டிக்கேட்ட மாணவி ஸ்ரீமதியை, செல்வி கால் முட்டி பகுதியில் கடித்தார்.இதில் காயமடைந்த மாணவியர் இருவரும் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவியர் கை.களத்துார் போலீசில் கொடுத்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.மாணவியர் தாக்கியதாகவும், வார்டன் சங்கீதா ஜாதி ரீதியாக திட்டியதாகவும் செல்வி கை.களத்துார் போலீசில் புகார் கொடுத்துள்ளார். செல்வி இ.கம்யூ., கட்சி வேப்பந்தட்டை ஒன்றிய செயலர் கொளஞ்சியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
ஏப் 02, 2025 14:54

அன்றைய சமயலில் எலும்பு இருந்திருக்காது


Yes your honor
ஏப் 02, 2025 09:54

இதுதான் திராவிட மாடல் என்பது. நீதி, நேர்மை, தர்மம், நியாயம் இவைகளுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவர்கள் சம்பந்தமெல்லாம் நிதியின் மீது மட்டும் தான். அந்த பாதிக்கப்பட்ட இருமாணவியரின் தந்தைகளும் திமுகவிற்கு ஓட்டு போட்டிருந்தால் இப்பொழுது வெட்கித் தலைகுனியட்டும்.


Oru Indiyan
ஏப் 02, 2025 08:19

காமெடி கட்சி அடிமட்ட உறுப்பினர் மனைவிக்கே இந்த திமிரு.. நேரம்டா சாமி.


Padmasridharan
ஏப் 02, 2025 07:48

அரசியல்வாதிகளின் மனைவிகளும் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பண்டிகை காலங்களில் நியாய விலைக்கடைகளில் இவர்கள் தனி சலுகைகள் எடுத்துக் கொள்கின்றனர். நல்ல கரும்பு, பிடித்த வண்ணத்தில் புடவை உள்ளேயே போயி எடுத்துக் கொள்வார்கள். இவர்களின் வீட்டிற்கே பொருட்கள் சேரும். மற்றவர்களுக்கு மெலிதான கரும்பும், புடவை, வேஷ்டி தராமலும் இருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை