| ADDED : நவ 17, 2025 01:46 AM
பெரம்பலுார்: இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என கூறி, 2 கோடியே 85 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலுார் மாவட்டம், சிறுகுடலை சேர்ந்தவர் நாகராஜன், 45, தொழிலதிபர். இவரிடம், முத்துநகரை சேர்ந்த சிவகுமார், 39; ராஜகோபால், 62; ராஜசேகர், 51; பஜிலாபேகம், 26; புகழேந்தி, 32, ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள், நாகராஜிடம், 20 லட்சம் ரூபாயை இரிடியத்தில் முதலீடு செய்திருப்பதாகவும், நீங்களும் முதலீடு செய்தால், 10 கோடி ரூபாய் கிடைக்கும் என கூறி, 2 கோடியே 85 லட்சம் ரூபாய் பணம் பெற்றனர். அவர்கள் சொன்னது போல பணம் கிடைக்காததால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நாகராஜை மிரட்டி உள்ளனர். நாகராஜ், பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., ஆதர்ஷ்பசேராவிடம் புகார் செய்தார். குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிந்து, சிவகுமார் உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்தனர்.