| ADDED : ஏப் 27, 2024 02:37 AM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சங்கமம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குறுவாண்டான் தெரு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்துள்ளதாக வந்த புகார் எதிரொலியால், அரசு அதிகாரிகளால் நேற்றுமுன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருச்சியில் உள்ள ஆய்வுத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.மேலும், 15 தினங்களுக்கு ஒரு முறை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்று விதி இருக்கும் நிலையில், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் எப்போது செய்யப்பட்டது, கடந்த ஒருமாத காலமாக ஏன் செய்யவில்லை என்று விளக்கம் கேட்டு சங்கமம்விடுதி ஊராட்சி செயலாளர் காளிமுத்துவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளன.இந்நிலையில், நேற்று குறுவாண்டான் தெரு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, மாவட்ட மருத்துவத்துறை சார்பில், மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், அப்பகுதி பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். மேலும், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் லாரி மூலமாக குடிநீர் வழங்கப்பட்டன.வேங்கைவயல் விவகாரம் போன்று இந்த விவகாரமும் விஸ்வரூபம் எடுக்கக் கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மிகவும் கவனத்துடன் இந்த விவகாரத்தை கையாண்டு வருகிறது. மாவட்ட காவல்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு, வெளியாட்கள் யாரும் குறுவாண்டான் தெரு பகுதிக்குள் நுழைவதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அனுமதி வழங்கவில்லை. வெளியாட்கள் யாரும் வந்தால், அவர்கள் ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டு, திரும்பி அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, கந்தர்வக்கோட்டை பி.டி.ஓ., பெரியசாமியிடம் கேட்டபோது, குறுவாண்டான் தெரு பகுதியில் நேற்று மருத்துவமுகாம் ஏதும் நடைபெறவில்லை, மருத்துவ முகாம் நடத்தலமா என்று ஐடியாவில் உள்ளோம். ஊராட்சி செயலாளர் காளிமுத்துவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஏதும் அனுப்பவில்லை, குடிநீர் தொட்டியில் உள்ள நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருச்சியில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட உள்ளது. தேர்தல் வந்ததால் குடிநீர் தொட்டி சுத்தம் செய்ய முடியவில்லை என்று இவ்வாறு கூறினார்.