புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், பொங்கல் பானை, அடுப்புகள் தயாரிக்க மண் கிடைக்காததால், தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையின்போது, மண் பானையில் பொங்கல் வைப்பது நடைமுறையில் உள்ளது. இதனால், பொங்கலுக்கு மண் பானைகளுக்கான தேவை அதிகரித்து விடும்.புதுக்கோட்டை மாவட்டம், மழையூர், கொசலக்குடி, துவரடிமனை, நெடுவாசல், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஆலங்குடி அருகே, மழையூர் பகுதியில் தயாரிக்கப்படும் மண் பானைகள் கலை நுணுக்கத்துடன் தயார் செய்யப்படுவதால், இவை பிரசித்தி பெற்று விளங்குகின்றன. பானைகள் தவிர தண்ணீர் தொட்டிகள், அடுப்புகள், சட்டிகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வியாபாரிகளும், பொதுமக்களும் இங்கு வந்து, மண் பாண்டங்களை வாங்கி செல்கின்றனர்.தற்போது, பெரிய பானை 100 ரூபாய்-க்கும், சிறிய பானை, சட்டி, கலயம் 50 ரூபாய்-க்கும், அடுப்பு 150 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.இதுகுறித்து, மண்பாண்ட தொழிலாளி சக்திவேல் கூறியதாவது: நவீன உலகில் மண் பாண்டங்களுக்கான தேவை அதிகம் இல்லை, இருப்பினும், கலாசாரம் மிக்க தமிழர்கள் இன்னும் மண் பாண்டங்களை பயன்படுத்தி வருகின்றனர். போதிய வருமானம் இல்லாததால், இளைய தலைமுறையினர் இத்தொழிலில் ஆர்வம் காட்டுவது இல்லை.மழையூர் பகுதிகளில் 50 குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மண் பாண்டங்கள் செய்வதற்கு, குளங்களில் மண் எடுக்க முடியவில்லை. இதனால், 10 கி.மீ., துாரம் மாட்டு வண்டிகளில் சென்று மண் எடுத்து வருகிறோம். போதிய அளவு மண் கிடைக்காததால், மண் பாண்டம் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு, மண் பானைகள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மண்பாண்டம் தயாரித்து, சேகரித்து வைக்க கூடம், வங்கி கடன் வசதி, மாதம் தோறும் உதவித்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.