உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புதுகையில் களைகட்டும் தேர்தல் பிரச்சாரம் அ.தி.மு.க.,- பா.ஜ.,-கம்யூ., மும்முரம்

புதுகையில் களைகட்டும் தேர்தல் பிரச்சாரம் அ.தி.மு.க.,- பா.ஜ.,-கம்யூ., மும்முரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களுடன் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து வீடுகள்தோறும் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரித்து வருகின்றனர்.நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் ஆறுமுகம் பிரச்சாரத்தின் போது அளித்துள்ள வாக்குறுதிகள் வருமாறு:நான் தலைவரானால் நகராட்சி நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் ஊழலற்ற நேர்மையான வெளிப்படையானதாக இருக்கும். குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். நகரில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவேன்.சுகாதாரப் பணிகளில் அதிக கவனம் செலுத்தி கொசுத் தொல்லைக்கு தீர்வுகாணப்படும். கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கப்படும். பாதாள சாக்கடை பணிகளால் சிதிலமடைந்துள்ள அனைத்து சாலைகளும் விரைவில் செப்பனிடப்படும்.நகரில் நிலவிவரும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணப்படும். கிடப்பில் போடப்பட்டுள்ள பசுமை புதுகை, தூய்மை புதுகை திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவேன். சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பாதுகாக்கப்படும்.உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி திறந்தவெளி சாக்கடைகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவேன் என்கின்ற வாக்குறுதிகளுடன் நகரின் பல பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரித்தார். இவருடன் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செல்வம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் சென்றனர்.* நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் நேற்று புதுக்கோட்டை ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை முடித்து வெளியே வந்த முஸ்லீம் சமுதாயத்தினரிடம் ஓட்டு சேகரித்தார். இவருடன் நகரச் செயலாளர் பாஸ்கர், முன்னாள் அறங்காவலர் வெங்கடாசலம் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் சென்றனர்.புதுக்கோட்டை பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரராசனை ஆதரித்து அப்பகுதிகளில் எம்.எல்.ஏ., முத்துக்குமரன் ஓட்டு சேகரித்தார்.நத்தம்பண்ணை, கட்டியாவயல், அடப்பக்காரன் சத்திரம், மாம்பட்டி, எல்லைப்பட்டி, வடமலாப்பூர், பாலன்நகர், ராஜாவயல் பகுதிகளில், பள்ளத்திவயல், விவேகானந்தாபுரம், பழனியப்பாநகர், அபிராமிநகர் ஆகிய பகுதிகளில் வேட்பாளர் சுந்தரராசனை ஆதரித்து நேற்றுக்காலை எம்.எல்.ஏ., முத்துக்குமரன் பிரச்சாரம் செய்தார்.அவருடன் கட்சி நிர்வாகிகள் முருகானந்தம், ஆதிமூலம், ஜெயக்குமார், சுப்பையா, ஆறுமுகம், ராமையா, ஆனந்தன் உட்பட பலர் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ