| ADDED : ஆக 15, 2024 03:51 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம்--கீழக்கரை ரோடு சக்கரகோட்டை ரயில்வே கேட் அருகே ரூ.24 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணி துவங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது பணி முடிந்து மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராத நிலையில் சமூக விரோதிகள் மது அருந்தும் மினி பாராக மாறியுள்ளது. மேலும் சில இடங்களில் ரோட்டில் ஜல்லிகற்கள் பெயர்ந்துள்ளன.ராமநாதபுரம் --கீழக்கரை ரோட்டில் ரயில்வே கேட் மூடப்படும் போது ராமேஸ்வரம் ரோட்டில் பழைய பஸ்ஸ்டாண்ட் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இப்பகுதியில் மேம்பாலம் அமைத்தால் திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி மக்கள் சக்கரக்கோட்டை வழியாக ராமநாதபுரம் நகருக்கு 3 கி.மீ., எளிதாக வந்து செல்ல முடியும் என மக்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து 2018ல்ரூ.24 கோடியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ரயில்வே பீடர் ரோட்டில் துவங்கிரயில்வே கேட் அருகே புதிய மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.இப்பாலம் ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், ஆமை வேகத்தில் நடந்த பணிகளால் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாலப்பணிகள் முடிந்துள்ளன. மின்விளக்குகள், வர்ணம் பூசும் பணிகளும் முடிந்துள்ளன. ஒரு மாதத்திற்கு மேலாகியும் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவில்லை. வாகன போக்குவரத்தை தடுக்க பெயரளவில் நுழைப்பகுதியில் தடுப்புகள் வைத்துள்ளனர்.இருப்பினும் போதிய கண்காணிப்பு இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் கஞ்சா, மது அருந்தும் மினி பாராக மேம்பாலம் மாறியுள்ளது. மேலும் திருப்புல்லாணி ரோடு இணைப்பு பகுதியில் ஜல்லிகற்கள் பெயர்ந்து பாலத்தில் ரோடு சேதமடைந்துள்ளது. எனவே புதிய ரயில்வே பாலத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில் பாலப்பணிகள் முடிந்து திறக்க தயார் நிலையில் உள்ளது குறித்து அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இந்த மாதத்தில் ரயில்வே பாலம்பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றனர்.