| ADDED : ஆக 05, 2024 10:00 PM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபம் முதல் சென்னை வரை கடலில் 604 கி.மீ., நீந்தி செல்ல மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 15 பேர் தொடர் நீச்சலில் ஈடுபட்டனர்.சென்னையில் உள்ள 'வேவ் ரைடர்ஸ்' என்ற அமைப்பில் உள்ள ஆட்டிசம், மாற்றுத்திறனாளி சிறுவர்கள் அபினவ், கணேஷ், ஹரிஷ்மோகன், ஜோஸ்வா ஆபிரகாம், லக்சய்குமார், லக்சய்கிருஷ்ணகுமார், லிடிஸ்கிருஷ்ணா, மோகன்ராஜ், நந்திகா, ரிதீஷ், ரோசன்ராஜ், சித்தார்த், ஸ்ரீராம், தேஜஸ், விஷால்மாதவ் ஆகியோர் சென்னையில் தனியார் பயிற்சி அகடாமியில் நீச்சல் பயிற்சி பெற்றனர்.மாற்றுத்திறனாளிகளும் உலகில் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மண்டபம் முதல் சென்னை வரை 604 கி.மீ., கடலில் தொடர் நீச்சலில் செல்ல முடிவு செய்தனர்.அதன்படி நேற்று மண்டபம் வடக்கு கடலில் சிறுமி நந்திகா முதலில் குதித்து நீந்தத் துவங்கினார். இந்த சிறுவர்கள் 10 முதல் 30 நிமிடம் வரை தொடர் நீச்சலில் ஈடுபட்டு ஆக.,15 ல் சென்னை மெரினா கடற்கரைக்கு வருவார்கள் என பெற்றோர் தெரிவித்தனர்.தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் தொடர் நீச்சலை துவக்கி வைத்தார். மீனவர் பேரவை மாவட்ட தலைவர் வக்கீல் ரெய்மண்ட், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.