| ADDED : ஜூலை 10, 2024 04:44 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் 2024 ஜூன் மாதத்தில் நடந்த வாகன தணிக்கையில் 95 வாகன ஓட்டுநர்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் ேஷக் முகமது தலைமையில் 2024 ல் ஜூன் மாதத்தில் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் சாலை விதிகளை மீறி இயக்கப்பட்ட 1189 வாகனங்களை வட்டார போக்குவரத்து களப்பணியாளர்கள் தணிக்கை செய்தனர்.இதில் 254 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கியதில் அரசுக்கு வரி வருவாயாக 1 லட்சத்து 6250 ரூபாயும், அபாரத தொகையாக 15 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாயும் விதிக்கப்பட்டது. வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கம் தொடர்பாக சோதனையில் விதி மீறி இயக்கிய வாகனங்களுக்கு 49 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.ராமநாதபுரத்தில் அதிவேகமாக வாகனம் இயக்குதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கை மீறி வாகனம் இயக்குதல், சரக்கு வாகனத்தில் அதிக சுமை ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனத்தில் அதிக பயணிகளை ஏற்றி செல்லுதல், சாலை விதிகளை மீறி விபத்து ஏற்படுத்துதல் குற்றங்களுக்காக 95 வாகன ஓட்டுநர்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.இனி வரும் காலங்களில் விபத்தில்லாத ராமநாதபுரத்தை உருவாக்க அனைவரும் சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.