| ADDED : ஜூலை 28, 2024 05:01 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலை சார்பில் நடப்பு ஆண்டில் 1000 எக்டேரில் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் ராஷ்டீரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தில் ஒரு துளி நீரில் அதிக பயிர் என்ற நோக்கத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு நுாறு சதவீதம், மற்றவர்களுக்கு 75 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. அதிக பட்சம் 5 எக்டேர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம். துணை நீர் மேலாண்மை திட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குறு வட்டங்களில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு ரூ.25 ஆயிரம், நீர் சேமிப்பு அமைப்புகள் அதாவது பண்ணைக் குட்டை தார் பாய் விரிப்புடன் 1 கன மீட்டருக்கு ரூ.125 என்ற அடிப்படையில் ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது.புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறுகளில் மின் மோட்டார் பொருத்த ரூ.15 ஆயிரம், நீர் ஆதாரங்களில் இருந்து நிலத்திற்காக பாசன குழாய்கள் வழியாக நீர் கொண்டு செல்வதற்கு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் என மானியமாக வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் தோட்டக்கலை துணை இயக்குனர் ஆறுமுகம் கூறுகையில், ஏற்கனவே மானியத்தல் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைத்த விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் முறைக்கு மாற விரும்பினால் மூன்றாண்டுகளுக்குள் விண்ணப்பித்து சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம்.விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு, நிலப்பட்டா, பயிர் அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் பொது இ-சேவை மையத்தில் அல்லது அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார்.