| ADDED : ஜூலை 10, 2024 05:08 AM
ராமநாதபுரம் ; ராமநாதபுரம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர்களின் மத்திய அமைப்பு சார்பில் 53 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மின் வாரிய மத்திய அமைப்பின் நிர்வாகி முருகன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் சிவாஜி போராட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு பொறியாளர் அமைப்பு சார்பில் ஆல்பர்ட், நிர்வாகிகள் ஜெபமணி, ஆரோக்கியம், முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.மின் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் காசிநாதன், பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடசுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலையரசன், மத்திய அமைப்பின் உழைக்கும் பெண்கள் அமைப்பின் புனிதா பேசினர். மாநில துணைத்தலைவர் குருவேல் நிறைவு செய்து பேசினார்.மின்வாரியத்தில் 53 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். அரசாணை 100 ல் முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை களைந்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்களை வழங்க கால தாமதம் செய்யக்கூடாது.அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்ப நல நிதி ரூ.5 லட்சத்தை மின் வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும். மின் விபத்தில் பலியாகும் ஊழியர்களுக்கு சிறப்பு நிதி ரூ.10 லட்சம் அறிவித்து அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தினர்.