உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி---வைகை--குண்டாறு இணைப்பு திட்டம் முடக்கம்: நிதி ஒதுக்கீடு இல்லை: 7  மாவட்ட விவசாயிகள் அதிருப்தி 

காவிரி---வைகை--குண்டாறு இணைப்பு திட்டம் முடக்கம்: நிதி ஒதுக்கீடு இல்லை: 7  மாவட்ட விவசாயிகள் அதிருப்தி 

ராமநாதபுரம்: தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள் பயனடையும் வகையில் காவிரி--வைகை--குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்2021 பிப்., 19ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி பணிகளை துவக்கி வைத்தார். இதற்காக 6941 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திட்டத்தின் பயன்கள்: காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத்திட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ளக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் 6300 மில்லியன் கன அடி நீரை ஆக்கபூர்வமாக தென் மாவட்டங்களுக்கு திருப்பி விடப்படுவதால் கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தாலுகாக்கள். திருச்சி மாவட்டத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகாக்கள் பயனடையும்.மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, திருமயம், குளத்துார், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில்தாலுகாக்கள், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தேவகோட்டை, திருப்பத்துார், சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை தாலுகாக்கள்.ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்துார், ராமநாதபுரம் தாலுகாக்கள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி தாலுகாக்கள், துாத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம்தாலுகா பகுதிகள் பயன்அடையும். மூன்று பிரிவுகளாக பணிகள்: கரூர் மாவட்டம் மாயனுார் கதவணையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பாயும் வெள்ளாறு வரை 118.5 கி.மீ., கால்வாய் வெட்டப்பட்டு திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 342 ஏரிகளும் 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்கள்பாசனம் பெறும். வெள்ளாற்றுடன் இணைப்பது முதல்நிலை. புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றிலிருந்து109 கி.மீ., நீளத்திற்கு கால்வாய் அமைத்து சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் இணைப்பதாகும். இதன் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 220 ஏரிகளும், 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலங்கள் பயனடையும். இது இரண்டாம் நிலை ஆகும். விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 34 கி.மீ., நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டு கிருதுமால்நதி, மற்றும் குண்டாற்றுடன்இணைக்கப்பட்டு 492 ஏரிகளும் 44 ஆயிரத்து 547 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் மூன்றாம் நிலை உள்ளது. இதில் பணிகள் அனைத்தும்முடக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுஇல்லாததால் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத்திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. ஏழு மாவட்ட விவசாயிகள் இந்த திட்டம் செயல்படுத்தப்படாததால் அதிருப்தியில் உள்ளனர்.

நிதி ஒதுக்கீடின்றிபணிகள் முடக்கம்

ராம.முருகன், காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாநில செயலாளர்: காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக்கான வெள்ளக்கால்வாய் அமைக்கும் பணியை தி.மு.க., அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது. முதல் நிலையில் மட்டும் பணிகள் நடந்து வந்தது. இதுவும் ஆமை வேகத்தில் நடந்தது. தற்போது நிதி ஒதுக்கீடு இல்லாமல் அதுவும் முடங்கியுள்ளது. தமிழக அரசு காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து விவசாய பாசன நிலங்கள் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சந்திரசேகர்
ஏப் 12, 2024 09:42

இலவசம் அதிகமாக கொடுப்பதினால் காசு இல்லை. ஆகவே வளர்ச்சி திட்ட பணிகளும் இல்லை. மக்களுக்கு எது வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்யட்டும். வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி என்றால் அந்த கட்சிக்கு ஓட்டு போட்டால் எப்படி வளர்ச்சி உருவாகும். மக்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பணத்தை அந்த அரசு தன் கஜானாவில் இருந்து கொடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை