| ADDED : ஜூன் 27, 2024 04:20 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவை முறைப்படி தெரிவிக்காமல் பழிவாங்கும் நோக்கத்துடன் கடையை அகற்றுவதாக புகார் தெரிவித்து பா.ஜ., கவுன்சிலர் குமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். கமிஷனர் அஜிதா பர்வின் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியதும் அஜண்டாவில் உள்ள தீர்மானங்களை வாசித்தனர்.அப்போது பா.ஜ., கவுன்சிலர் குமார் குறுக்கிட்டு பொருள் 3ல் கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தீர்மானத்தில் தவறு உள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்றார்.அவ்வாறு எதுவும் இல்லை நீதிமன்ற உத்தரப்படி எல்லாமே சட்டப்படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என கமிஷனர் கூறினார். கடையை வேறு இடத்திற்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி கவுன்சிலர் குமார் கூட்ட அரங்கத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது அவரை கண்டு கொள்ளாமல் வரிசை எண்ணை மட்டும் வாசித்து 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தலைவர் கார்மேகம் நன்றி தெரிவித்தார். கவுன்சிலர்கள் கோரிக்கைளை பேசக்கூட வாய்ப்பு அளிக்கப்படாமல் அவசரமாக15 நிமிடங்களில் கூட்டம் முடிக்கப்பட்டது.இதனிடையேகூட்டத்தை நடத்தவிடாமல் தனது சொந்த பிரச்னைக்காக பா.ஜ., கவுன்சிலர் குமார் தர்ணா செய்கிறார் என அவரை கண்டித்து தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் வெளியே கோஷமிட்டனர்.கவுன்சிலர் குமார் கூறுகையில், 60 ஆண்டுகளாக போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடை செயல்படுகிறது. நகராட்சி கூட்டத்தில் குறைகள் குறித்து அடிக்கடி கேள்வி கேட்டதால் அரசியல் காரணங்களுக்காக வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்கத்தில் கடையை அகற்ற முயற்சி நடக்கிறதுமாநில தலைவர் அண்ணாலையிடம் தெரிவித்து மேற்கொண்டு சட்டப்படி நகராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.