| ADDED : ஜூன் 15, 2024 06:49 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அரசு மருத்துவ மனையில் போதிய டாக்டர்கள் இல்லாததை கண்டித்து சி.ஐ.டி.யு., சார்பில் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் 2020ல் 11 டாக்டர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது 3 பேர் மட்டுமே உள்ளனர்.இதனால் உள், வெளி நோயாளிகள் முழுமையான சிகிச்சை பெற முடியவில்லை. கர்ப்பிணிகள், குழந்தைகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் நோயாளிகளை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்புவதால் நோயாளிகள் பணம் செலவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.இதனை கண்டித்தும் கூடுதல் டாக்டர்களை நியமிக்கக் கோரி நேற்று ராமேஸ்வரம் தபால் நிலையத்தில் இருந்து சி.ஐ.டி.யு., சார்பில் சவப்பெட்டியுடன் ஏராளமானோர் ஊர்வலமாக வந்து அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பிரகலாதன், ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உமாதேவி ஆகியோர் சமரச பேச்சு நடத்தினர். விரைவில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதில் சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் சிவாஜி, கருணாமூர்த்தி, செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.